Published : 29 Sep 2021 03:21 AM
Last Updated : 29 Sep 2021 03:21 AM

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - மாதிரி வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு வழிகாட்டல்

நீலமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச் சீட்டு முறையில் வாக்களிக்கும் வாக்காளர்.

கள்ளக்குறிச்சி

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டிய நிலையில், இந்தத் தேர்தலில் வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு மாதிரி வாக்குச்சாவடிகளில் வழிகாட்டுதல் அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி ஒன்றியம் நீலமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி மைய எண் 160-ல் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச்சீட்டில் வாக்களிக்கும் வழிகாட்டல் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் நேற்று தொடங்கி வைத்தார். இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் முறை குறித்த ஐயம் உள்ளோர், இதில் பங்கேற்று மாதிரி வாக்குகளைச் செலுத்தினர்.

தொடர்ந்து, ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசிம் குறித்த விழிப்புணர்வை தேர்தல் அலுவலர்கள் அப்பகுதியில் மேற்கொண்டனர்.

அப்போது ஆட்சியர் செய்தி யாளர்களிடம் கூறியது:

வாக்குச் சீட்டின் நிறங்கள்

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை மற்றும் இளநீல நிறம், கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பச்சை நிறம் மற்றும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்தில் வாக்கு சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளது.

சின்னங்களுடன், இந்த நிறங்களையும் கவனத்தில் கொண்டு வாக்களிக்குமாறு கள்ளக்குறிச்சி ஆட்சியர் தர் அறிவுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, பரிசீலனை தொடர்பான பணிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் விவரங்கள் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீட்டு பணி முடிவடைந்துள்ளன.

சட்டப்பேரவை பொதுத்தேர் தலில் மின்னணு வாக்குப்பதிவு முறையில் வாக்கு செலுத்தும் முறை மேற்கொள்ளப்பட்டன. தற்போது வாக்குச்சீட்டில் வாக்குசெலுத்தும் முறை மேற்கொள்ளப்படவுள்ளதால் வாக்காளர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி ஒன்றியம் நீலமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி மைய எண் 160-ல் மாதிரிவாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், 100 சதவீதம் தேர்தலில் பங்கேற்பது குறித்தும் கிராமப்புற வாக்காளர்களிடம் வலியுறுத்தியிருக்கிறோம். தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார் அளிக்க இலவச தொலைபேசி சேவை எண் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, அனைவரும் தேர்தலில் வாக்களிக்குமாறு கூறியிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

முன்னதாக ஊரக உள்ளாட்சித்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்கப்பட்டது.

அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரா.மணி, கள்ளக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x