

பொதுவிநியோகத் திட்ட செயல்பாட்டில் தமிழகம் முதல் மாநிலமாகத் திகழ்கிறது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக கூட்டரங் கில் பொதுவிநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்து மண்டல மேலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.
இதில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் பேசியதாவது:
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி இன்றுவரை கொள்முதல் செய்யப்பட்ட 10 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லுக்கு ரூ.63 கோடியே 50 லட்சம் ஊக்கத்தொகையாக விவசாயிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. இதில் 8 லட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் அரவை செய்யப்பட்டு, பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியாக பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின்கீழ் 1 கோடியே 66 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தலா 20 கிலோ அரிசியும், அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. பருப்பு வகைகள், பாமாயில் முதலியன மானிய விலையில் மாதந்தோறும் வழங்கப் படுகின்றன. பொதுவிநியோகத் திட்ட செயல்பாட்டில் இந்தியாவி லேயே தமிழகம் முதல் மாநிலமாகத் திகழ்கிறது.
உற்பத்தி செய்யப்படும் அரிசி முதலான தானியங்களை சேமிக்க 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 நவீன சேமிப்புக் கலன் கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுவிநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம், சத்துணவுக் கூடங்கள், அரசு மாணவ, மாணவியர் விடுதிகள், அரசு மருத்துவமனைகள், காப்பகங்கள், அம்மா உணவகங்கள் ஆகியவற்றுக்கு உணவுப் பொருட்களை தரத்துடன் அனுப்ப வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் 26,658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17,213 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 555 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் கூறினார். கலந்தாய்வுக் கூட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.