

தலித் இளைஞர் சங்கர் படுகொலைக்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே குமரலிங்கத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர், தலித் சமூகத்தைச் சேர்ந்த சங்கர், பழனியைச் சேர்ந்த கௌசல்யா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டதற்காக பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருக்கிறது. இக்கொலையை இருசக்கர வாகனங்கள் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நிகழ்த்தியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட சங்கரை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தல்கள் வந்ததன் அடிப்படையில் காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. இதற்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக இத்தகைய படுகொலைகள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக காதல் திருமணங்களை சகித்துக் கொள்ளாத ஆதிக்க சமூகத்தினர் வன்முறை மூலமாக பாடம் கற்பிக்க முயல்வது ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
இத்தகைய படுகொலைகளை தடுத்து நிறுத்துகிற வகையில் தமிழக காவல்துறையினர் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவாகவே இவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படுகொலையில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்தார் சம்மந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் யார் சம்மந்தப்பட்டிருந்தாலும் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காதலித்து, கலப்பு திருமணம் செய்து கொண்ட சங்கரை அவரது மனைவி கௌசல்யாவின் முன்பாகவே படுகொலை செய்யப்பட்டிருப்பது ரகசிய கேமராவில் பதிவு செய்யப்பட்டு, ஆதாரங்கள் கிடைத்த பிறகும் காவல்துறையினர் இதுவரை எவரையும் கைது செய்யாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
படுகொலையில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு, ஜாதி வெறி சக்திகளை ஒடுக்கினால்தான் சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்படும்'' என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.