

பாமகவுக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை ஜி.கே.மணி நேற்று சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத் தில் 234 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் மாம்பழம் சின்னத் தில் பாமக போட்டியிடுவதற்கான தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
பொதுக்கூட்டம், தெருமுனை பிரசாரக் கூட்டம் நடத்த எந்தக் கட்சி அனுமதி கோரினாலும் வழங்க வேண்டும். அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை தேர்தல் முடியும் வரை தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் அகர வரிசைப்படியோ அல்லது குலுக்கல் முறையிலோ தேர்தல் ஆணையமே அலைவரிசை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுபோல அரசு கேபிள் நிறுவனத்துக்கு சிறப்பு அதிகாரியாக மூத்த நடுநிலையான ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் கேட்டுள்ளோம்.
தேர்தல் அறிக்கையும், வேட்பாளர் பட்டியலும் தயாராகிவிட்டது. விரைவில் அவை வெளியிடப்படும். இத்தேர்தலில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். பூரண மதுவிலக்கு வேண்டும், லஞ்சம், ஊழல் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்று பெண்கள், படித்தவர்கள், இளைஞர்கள், நடுநிலையாளர்கள் விரும்புகின்றனர். மக்கள் பலம் எங்களுக்கு இருக்கிறது. மக்களை நம்பி தன்னம்பிக்கையுடன் இத்தேர்தலை பாமக சந்திக்கிறது.
இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.