

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைச்சர் மூர்த்தி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில், திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:
உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக இருக்கக்கூடியவர்கள். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் தமிழக முதல்வர். திமுக ஆட்சிக்கு வந்ததும் கரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. பெண்களுக்கு நகர்ப்புற பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் வசதியை முதல்வர் கொண்டுவந்துள்ளார். ஆட்சிக்கு வந்த 4 மாதத்துக்குள் இந்த பகுதியில் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டது.
கடையம் பகுதியில் அறநிலையத்துறை சார்பில் ஒரு கல்லூரி அமைக்க ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்றார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜா, எஸ்.பழனி, ரூபி மனோகரன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆலங்குளம் ஒன்றிய திமுக செயலாளர் செல்லத்துரை நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து, தென்காசிக்குச் சென்ற கனிமொழி, ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 108-வது இடமும், தமிழக அளவில் 3-வது இடமும், தமிழக அளவில் பெண்கள் பிரிவில் முதலிடமும் பிடித்த தென்காசியைச் சேர்ந்த சண்முகவள்ளியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.