Published : 29 Sep 2021 03:22 AM
Last Updated : 29 Sep 2021 03:22 AM

நெல்லையில் புது அனுபவம் தரக் காத்திருக்கிறது; அறிவியல் பூங்கா தயார்: புதிய பேருந்து நிலையத்தில் ரூ.10 கோடியில் அமைப்பு

திருநெல்வேலி

திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தின் முன்பகுதியில் ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல், தொழில்நுட்ப பூங்கா (STEM PARK) விரைவில் திறக்கப்படவுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படும் நிலையில், அதன் முன்புறம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித பூங்கா 3 ஏக்கர் பரப்பளவில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்தன.

ராக்கெட் மாதிரிகள்

பேருந்து நிலையத்தின் பிரதான நுழைவு பாதையின் இருபுறமும் இந்த பூங்கா பிரம்மாண்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. திறந்தவெளி மற்றும் உள்அரங்கங்களாக பூங்கா உள்ளது. பூங்காவினுள் அப்துல்கலாமின் முழு உருவ சிலை, சர்.சி.வி. ராமன் உள்ளிட்ட இந்திய அறிவியல் அறிஞர்களின் மார்பளவு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

அறிவியல் மையங்களில் உள்ளதுபோல் டைனோசர் உருவங்கள், இஸ்ரோவின் 2 ராக்கெட் மாதிரிகள், இயற்பியல் விதிகள் தொடர்பான மாதிரிகள் உள்ளிட்டவை திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளன.

ரோபோ செயல்பாடுகள், பொறியியலில் நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை செய்முறையாக தெரிந்துகொள்ளும் வகையில் தனித்தனி உள்அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பியுள்ள 2 ரோவர்களின் மாதிரிகள் உள்அரங்கில் வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு உள்அரங்கில் டிரோன்களின் செயல்பாடுகள், அவற்றின் மாதிரிகள் குறித்து தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பூங்காவில் ஒருபுறத்திலிருந்து பேருந்து நிலைய பிரதான நுழைவு பாதையை கடந்து மறுபுறம் செல்ல சிறப்பு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மும்பைக்கு அடுத்ததாக திருநெல்வேலியில் பிவிசி, துணி போன்ற பொருளால் இந்த நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மழை, வெயில் மற்றும் காற்றால் இது பாதிக்காது என்று, பணியாளர்கள் தெரிவித்தனர்.

99 சதவீத பணிகள் நிறைவு

இந்த ஸ்டெம் பார்க் அமைப்பு பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் பொதுமக்கள், மாணவ, மாணவியர் பார்வைக்கு திறக்கப்படும் என்று தெரிகிறது. திருநெல்வேலி மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவுக்குள் செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. அத்துடன் உள்அரங்கங்களில் செய்முறை விளக்கம் பெறவும், தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளவும், பயிற்சி பெறவும் மாணவ, மாணவியர் உரிய கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.

முறையான பராமரிப்பு

இளம் தலைமுறையினருக்கும், மாணவ, மாணவியருக்கும் அறிவியல், தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை ஊட்டவும், பள்ளிப் பருவத்திலேயே பொறியியல், ரோபோடிக்ஸ் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளவும், அதில் பயிற்சி பெறவும் இந்த பூங்கா உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அதேநேரத்தில் கோடிக்கணக்கில் செலவிட்டு அமைத்துள்ள இந்த பூங்காவை முறையாக பராமரிக்கவும், சமூகவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் தொடக்கத்தில் இருந்தே உரிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் அமல்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

விஞ்ஞானிகளை உருவாக்கும் முயற்சி

ரோபோட்டிக் மையத்தில் 1 அடி உயரத்தில் ரோபோ ஒன்று உள்ளது. அதன் செயல்பாடுகள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளுக்கு சென்று ரோபோட்டிக் குறித்து பயில ஆர்வமுள்ள மாணவ, மாணவியருக்கு பள்ளிப் பருவத்திலேயே அதுகுறித்து தெரிந்து கொள்ள இது வாய்ப்பாக அமையும்.

‘இன்னோவேஷன் கப்’ எனப்படும் உள்ளரங்கில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மாதிரிகளை செய்துபார்க்க கருவிகள், உபகரணங்கள் இருக்கின்றன. இங்குள்ள உள்ளரங்கங்களில் மாணவ, மாணவியருக்கு வழிகாட்டுவதற்காக, அத்துறைகளில் கல்வி பயின்று நிபுணத்துவம் பெற்ற பட்டதாரிகளும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x