

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக்கூட்டத்துக்கு முதல்வர் ரங்கசாமி அழைக்காததால் புதுச்சேரி மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடவுள்ளது என்று அக்கட்சியின் மாநிலச் செயலர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதுச்சேரி மாநில பாமக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான தன்ராஜ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தது. இந்தக் கூட்டணி தொடர்ந்து வரும் நிலையில் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பத்தாண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், இது முறையாக நடத்தப்படுமா என பொதுமக்களுக்கு ஐயம் எழுந்துள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக பத்து இடங்களில் தனித்து போட்டியிடும் என அறிவித்த நிலையில் கூட்டணி கட்சியினர் கேட்டுக் கொண்டதன் பேரில் நாங்கள் போட்டியிடாமல், கூட்டணிக்காக உழைத்தோம். உள்ளாட்சித்தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய மூன்று கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டணியின் தலைவர் என்ற முறையில் முதல்வர் ரங்கசாமி பாமகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
பாமக குறித்து அவர்கள் எதுவும் பேசவில்லை என எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இது ஒரு சந்தர்ப்பவாத செயல்பாடு. இந்த சூழலில் நாங்கள் கடைசிவரை காத்திருக்காமல் தேர்தல் பணியில் இப்போதே இறங்கி இருக்கிறோம்.
இன்று முதல் உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பாளர்களிடம் விருப்ப மனு பெற தொடங்கியிருக்கிறோம். புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தலில் அனைத்து இடங்களுக்கும் பாமக தனித்து போட்டியிட முடிவு எடுத்துள்ளோம்.
இதுகுறித்து உயர்மட்ட குழு கூடி ஆலோசித்து தலைமைக்கு தெரிவித்து இருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி பாமகவை முறையாக அழைக்காத காரணத்தால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்." என்று குறிப்பிட்டார்.