

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. ரப்பர் பால் வெட்டும் தொழில் உட்பட அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கனமழை கொட்டியது. இதனால் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்று இரவில் மழை நின்று மிதமான சூழல் நிலவிய நிலையில் இன்று காலையில் இருந்து 3 மணி நேரம் கனமழை கொட்டியது. இதனால் ஏற்கெனவே தேங்கிய மழை நீருடன் தேங்கி கால்வாய், சாலையோரங்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
கனமழை குறைந்து பேச்சிப்பாறை அணைக்கு உள்வரத்தாக 2,346 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் இன்று பெய்த கனமழையால் நீர்வரத்து மேலும் அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 44 அடியாக இருந்த நிலையில் 2 ஆயிரம் கன அடிக்கு மேல் திறந்து விடப்பட்டது. இதைப்போல் பெருஞ்சாணி அணை நேற்று ஒரே நாளில் 4 அடி நீர்மட்டம் உயர்ந்தது. அணைக்கு 2869 கன அடி தண்ணீர் உள்வரத்தாக வரும் நிலையில் நீர்மட்டம் 63.50 அடியாக உயர்ந்தது. சிற்றாறு அணைகளில் நீர்மட்டம் 16 அடிக்கு மேல் உயர்ந்தது. நாகர்கோவில் நகருக்குக் குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 23 அடியாக உயர்ந்துள்ளது.
பேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி தண்ணீருக்கு மேல் வெளியேறி வருவதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. மழைநீருடன் அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரும் ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் கரைப்பகுதியைத் தொட்டவாறு தண்ணீர் அதிக அளவில் பாய்கிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகள், தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடித்து வருகிறது.
மேலும் வள்ளியாறு, பரளியாறு, பழையாறு, மற்றும் கிளை கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறு, கால்வாய்களின் ஓரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறை, மற்றும் வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கனமழையால் கன்னியாகுமரி கடல் பகுதியில் சூறைக் காற்றுடன் கடும் கடல் சீற்றம் நிலவியது. இதனால் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான குமரி மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. முட்டம், தேங்காய்பட்டணம், குளச்சல், சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகங்களில் படகுகள் நிறுத்தப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டது. இதைப் போல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வள்ளம், நாட்டுப் படகுகளும் கடலுக்குச் செல்லவில்லை.
குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் தோட்டம், மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் தண்ணீர் தேங்கின. பால் வெட்டும் பணி கடந்த இரு நாட்களாக முடங்கியுள்ளது. இதைப் போலவே கட்டிடத் தொழில், செங்கல் சூளை, தென்னை சார்பு தொழில்கள் என குமரி மாவட்டத்தில் அனைத்துவிதத் தொழில்களும் பாதிக்கப்பட்டன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
மாணவ, மாணவியர்கள் இன்று காலையில் பெய்த கனமழையால் நனைந்தவாறு பள்ளி, கல்லூரிக்குச் சென்றனர். பெருஞ்சாணியில் 36 மி.மீ., புத்தனணையில் 37 மி.மீ., சிவலோகத்தில் 27 மி.மீ., மழை பெய்திருந்தது. குமரி மாவட்டத்தில் இன்று பகல் முழுவதும் மேகம் சூழ்ந்து குளிரான தட்பவெப்பம் நிலவியது.