Last Updated : 28 Sep, 2021 03:53 PM

 

Published : 28 Sep 2021 03:53 PM
Last Updated : 28 Sep 2021 03:53 PM

புதுச்சேரியில் 17 அரசுத் துறைகள் வசூலில் ரூ.1,104 கோடி பாக்கி: சுட்டிக்காட்டும் முன்னாள் எம்.பி.

புதுச்சேரி

புதுச்சேரியில் 17 அரசுத் துறைகளில் வசூல் செய்யப்பட வேண்டிய பாக்கித் தொகை ரூ.1,104 கோடியாகவுள்ளது என்று முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதுவை சட்டசபையில் இந்திய தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”அரசின் 3 முக்கியக் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. புதுவை அரசு சட்டப்படி வர வேண்டிய சொந்த வருவாயைப் பெறாமல் உள்ளது. 17 அரசுத் துறைகளில் சுமார் ரூ.1,104 கோடி நிலுவை உள்ளது. குறிப்பாக மின்துறையில் அதிக அளவாக ரூ. 709 கோடியும், வணிகவரித் துறையில் ரூ.274 கோடியும், கலால்துறையில் ரூ.67.4 கோடியும், பொதுப்பணித் துறையில் ரூ.41.5 கோடியும் நிலுவை உள்ளது.

வணிக வரியை இறுதி செய்யாததால் வரியை வசூலிக்க முடியவில்லை. வரி கட்டாமல் பலர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதால் வருவாய் கிடைக்கவில்லை. இதைச் சரிசெய்திருந்தால் புதுவை அரசின் சொந்த வருவாய் ரூ.1,500 கோடி உயர்ந்திருக்கும். இதை வசூலித்திருந்தால் நிதி நிலை மேம்பட்டிருக்கும். உபரி பட்ஜெட்டைக் கொடுத்திருக்க முடியும். இந்த வருவாய் இழப்பினால்தான் சமூக நலன் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு செயலர்கள் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

அரசு செலவு செய்யும் முறையிலும் குறைபாடுகள் உள்ளன. 74 திட்டங்களுக்கு ரூ.334 கோடி செலவிட மதிப்பிட்டு ரூ.151 கோடி செலவிட்டு 13 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடியவில்லை. மக்கள் வரிப்பணம் வீணாவதற்கு யார் பொறுப்பு? அரசு செலவழித்த ரூ.153 கோடி எங்கே சென்றது? அரசு கடன் வாங்கும் முறையும் சீராக இல்லை. 71 பொதுத் துறைகளில் 53 துறைகள் கணக்கைச் சமர்ப்பிக்கவில்லை.

நிதியில்லாத சூழலில் மீண்டும் கடன் வாங்குவது நல்ல நிதி நடைமுறை அல்ல. தணிக்கை அறிக்கை பொதுமக்களின் பணம் தவறாகக் கையாளப்படுகிறது என்ற உண்மையை உணர்த்துகிறது. அரசு இந்த அறிக்கையை நன்கு ஆராய்ந்து எதிர்காலத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரிக்கு ஏற்பட்ட இழப்பை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை”.

இவ்வாறு முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x