பொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளப்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தால், அதன் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

சட்டத்துக்கு உட்பட்டு கிளப் நடத்தப்படுவதாகவும், ஆனால், காவல்துறையினர், சோதனை என்ற பெயரில் தங்களைத் துன்புறுத்துவதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், சென்னை கோமலீஸ்வரன் பேட்டையில் உள்ள பாண்டியன் பொழுதுபோக்கு கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் இன்று (செப். 28) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், இந்த கிளப் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகவும், சட்டவிரோதமாகப் பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கிளப்கள் மற்றும் சொசைட்டிகள் சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்கிறதா என்பதை ஆய்வு செய்வது காவல்துறை அதிகாரிகளின் கடமை என்று தெரிவித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி.யைச் சேர்த்த நீதிபதி, தமிழகம் முழுவதும் உள்ள கிளப்கள் மற்றும் சொசைட்டிகளை, சோதனை செய்து அவை முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனவா, அதில் சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகள் நடைபெறுகின்றனவா என ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட பதிவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிலும் கிளப்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த கிளப்களின் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, இதுகுறித்து 12 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in