Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM

பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பங்களை கொண்டுவரும் டிஆர்டிஓ.வின் சென்னை ‘புதுமை ஆராய்ச்சி மையம்’

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, நாட்டின் பாதுகாப்புத் தேவைகளையும் ஆராய்ச்சிப் போக்கையும் இணைக்கும் நோக்கில், ‘புதுமை ஆராய்ச்சி மையம்’ (ஆர்.ஐ.சி) செயல்பட்டு வருகிறது. இம் மையம்சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில், கடந்த 2012-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

கல்வியாளர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை இணைக்கும் தொடர்புக் கண்ணியாக இருப்பதும், பாதுகாப்புத் துறையில் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டு, அவற்றில் ஆராய்ச்சி மேற்கொண்டு, அவற்றை எளிதாக்கி பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதுமே இந்த மையத்தின் முக்கிய நோக்கம்.

எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டேஷன் சிஸ்டம்ஸ் (EMECS), கடற்படைஅமைப்பு, கடற்படை தொழில்நுட்பங்கள் (NSNT), மேம்பட்ட வாகனதொழில்நுட்பங்கள் (AVT) போன்றவற்றில் இந்த ஆராய்ச்சி மையம் மேற்கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் புதுமையாக உள்ளன. இந்த ஆராய்ச்சி மையத்தின் வெற்றிக்கு, சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட மற்றொரு மையமே சான்று.

கடந்த 5 ஆண்டுகளாக இந்தஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகப் பணியாற்றிவரும் வி.நடராஜன், இந்த தலைமுறை மாணவர்களுக்கு வழிகாட்டுபவராகத் திகழ்கிறார்.

விண்வெளியில் காஸ்மிக் கதிர்வீச்சு பாதிப்பைத் தடுக்கும் விண்வெளி கலங்களின் மீதான மேற்பூச்சு, எல்லையில் எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் ஆளில்லா குட்டி விமானம், கடலில் எதிரிகளின் ஊடுருவலைக் கண்காணிக்க உதவும் சோனார் தொழில்நுட்பம் போன்றஆராய்ச்சிகள் அவருடைய தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள குக்கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, படித்த அவர், இன்றுஎட்டியிருக்கும் உயரம் அளப்பரியது. கடினமாக உழைத்தால் தடைகளை மீறி சாதிக்கலாம் என்பதை அந்த உயரம் உணர்த்துகிறது.

இந்த ஆராய்ச்சி மையம் விண்வெளி, மென்பொருள் மேம்பாடு, நானோ பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இம்மையத்தின் விஞ்ஞானிகள் சென்னை ஐஐடியில் துணைபேராசிரியர்களாகவும் பணியாற்றுவதன் மூலம், மாணவர்களுக்கு ஆராய்ச்சிகளின் மேல் ஈர்ப்பையும் பிடிப்பையும் ஏற்படுத்துகின்றனர்.

ஆராய்ச்சிகளில் தனிப்பட்ட நபர்களை அல்லாமல், ஒட்டுமொத்த கல்வி நிறுவனத்தையே இந்த ஆராய்ச்சி மையம் பங்கேற்க வைத்திருக்கிறது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் மாறினாலும், ஆராய்ச்சி தடையின்றி தொடர்வது உறுதிசெய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x