Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM

தமிழகம் முழுவதும் 115 இடங்களில் நடந்த ஆய்வில் ரூ.101 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: நிறுவனங்களின் உரிமம் ரத்து என அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை

தமிழகத்தில் 115 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் ரூ.101 கோடிக்குவரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று வணிக வரி, பதிவுத் துறைஅமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

சென்னையில் வணிக வரித் துறை அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது:

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஜவுளித் தொழில் செய்பவர்கள் உள்ளீட்டு வரியை அரசுக்கு குறைத்து செலுத்துவது தெரியவந்துள்ளது. இதனால் உண்மையான நிலவரத்தை அறிவதற்காக, துறை செயலர், ஆணையர் உத்தரவின்பேரில், 115 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட வணிக வரி அதிகாரிகள் மூலம் தொடர்ந்து 14 நாட்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இதில், பல இடங்களில் பொருட்களை வாங்கி, மக்களிடம் விற்கும்போது உள்ளீட்டு வரியை அரசுக்குசெலுத்தாமல் வரி ஏய்ப்பு நடந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு தொடர்ந்து நடந்துவருகிறது. இதுவரை நடந்துள்ள ஆய்வில் முதல் கட்டமாக, அரசுக்குசெலுத்த வேண்டிய வரி ரூ.101.49கோடி வரை ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் வரி ஏய்ப்பு செய்பவர்கள் எண்ணிக்கை அதிரித்து வருகிறது. இதை தடுக்க துறைரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வணிகமே செய்யாமல் போலி ரசீது மூலம் வணிகம் செய்வதாக காட்டுபவர்கள், வரி ஏய்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை, பெயரளவில் ஜிஎஸ்டி எண் வாங்கிக்கொண்டு, தொழில் செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்ட 400 பேர் வரை கண்டறியப்பட்டு, ஜிஎஸ்டி எண் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் ரசீது பெற்ற பெரிய நிறுவனங்கள் குறித்தும் ஆய்வு நடந்து வருகிறது.

சில பெரிய நிறுவனங்களில்ஆய்வு நடத்தும்போது, ஆவணங்கள் மறைக்கப்படுகின்றன. இதற்காக ஆய்வுக் குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளோம். ஒரேஇடத்தில் பணியாற்றி வரும் 55 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். பதிவுத் துறையிலும் முறைகேடுகளை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x