

உயர் நீதிமன்றத்தில் சிஐஎஸ்எப் போலீஸாரின் பாதுகாப்பு பணி தொடர்பாக தேவையான அரசு ஆணைகளை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி மதுரை வழக்கறிஞர்கள் கடந்த ஆண்டு தலைமை நீதிபதி அமர்வு முன்பு திடீர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீஸார் (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு பணி களை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு தள்ளுபடியானது. இந்நிலையில் முதற்கட்டமாக 6 மாதங்களுக்கு சிஐஎஸ்எப் போலீஸாரின் பாது காப்பு பணிக்கு ஆகும் செலவான ரூ.16.60 கோடியை மத்திய அரசுக்கு தமிழக அரசு வழங்கியது. இதன்படி கடந்த 2015, நவம்பர் 16-ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சிஐஎஸ்எப் போலீ ஸார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.கலையரசன், ‘‘தமிழக அரசு இதுதொடர்பாக இன்னும் போதுமான அரசு ஆணைகளை பிறப்பிக்கவில்லை’’ எனக்கூறி ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதேபோல மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, ‘‘சிஐஎஸ்எப் போலீஸாருக்கு தமிழக அரசு வழங்கிய செலவு நிதி வரும் மே மாதம் வரைதான் இருக்கிறது. அதன்பிறகு அந்த 6 மாத காலம் காலாவதியாகிவிடும்” என்றார்.
அதன்பிறகு நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவில், ‘‘தற்போ துள்ள சூழலில் சிஐஎஸ்எப் போலீஸாரின் பாதுகாப்பை நீட்டிப்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
மார்ச் 30-க்கு ஒத்திவைப்பு
ஏற்கனவே இதுதொடர்பாக தமிழக அரசுக்கு அனுப்பிய பரிந் துரை களில் சிலவற்றின் மீது மட்டும் தான் அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. சிஐஎஸ்எப் வீரர்கள் தங்குமிடம், வாகன வசதி, பாதுகாப்பு கருவிகள் போன்றவை தொடர்பாக எந்தவொரு அர சாணையும் இதுவரை பிறப்பிக்க வில்லை.
எனவே அடுத்த விசா ரணைக்கு முன்பாக தமிழக அரசு தேவையான அரசு ஆணைகளைப் பிறப்பித்து அவற்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். போதிய நிதிஒதுக்கீடும் வழங்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை மார்ச் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.