Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM

கலவரத்தில் பொது சொத்துகளுக்கு சேதம்; பாமகவிடம் இழப்பீடு வசூலிக்க சட்ட ரீதியாக தடை இல்லை: கட்சித் தலைவர் ஜி.கே.மணி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

மரக்காணம் கலவரத்தில் பொதுசொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்துக்கான இழப்பீட்டை வசூலிப்பதற்கான விசாரணைக்கு ஆஜராகுமாறுபாமக தலைவர் ஜி.கே.மணிக்குஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்.25-ம் தேதி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரைத் திருவிழா நடத்தப்பட்டது. அப்போது மரக்காணம் அருகே கட்டையன் தெரு காலனி பேருந்து நிறுத்தத்தில் கலவரம் ஏற்பட்டு, சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. அந்த கலவரம் காரணமாக பாமகவினர் கைது செய்யப்பட்டனர். அதைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 2013 ஏப்.25 முதல் மே 19 வரை பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு ஏற்பட்ட இழப்பை வசூலிப்பது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு வருவாய் நிர்வாக ஆணையர், நோட்டீஸ் பிறப்பித்தார்.

இதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஜி.கே.மணி வழக்குதொடர்ந்தார். ‘அரசியல் உள்நோக்கத்துடன் இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

கலவரம் காரணமாக 58 பேருந்துகள் சேதம் அடைந்ததாகவும், பேருந்துகள் இயக்கப்படாததால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிஎஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவு:

தமிழ்நாடு பொது சொத்து சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டப்படி பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவது மட்டுமின்றி, வருவாய் இழப்பு ஏற்படுத்தினாலும், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. இந்த கலவர வழக்கில் பாமகவினர் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை வசூலிக்க சட்ட ரீதியாக தடை இல்லை.

இதுதொடர்பாக முழு விசாரணை நடத்திய பிறகே, இழப்பீடு நிர்ணயிக்கப்படும் என்பதால், விசாரணைக்கு ஆஜராகும்படி பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸூக்கு பாமக தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். எனவே, நோட்டீஸை ரத்து செய்ய முடியாது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், ‘‘அரசியல் கட்சியினர் போராட்டங்களின்போது ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். பொது சொத்துகள் சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம், 1992-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோதும் 29 ஆண்டுகளாக முறையாக அமல்படுத்தவில்லை. இந்த சட்டத்தின் அடிப்படையில் எத்தனை பேரிடம் இழப்பீடு வசூலிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

இனிவரும் காலங்களில் இந்த சட்டத்தை கடுமையாக அமல்படுத்தமாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். ஆளும்கட்சியினரே இவ்வாறு செய்தாலும், அதிகாரிகள் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x