தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் மூலப்பொருட்களை வெளியேற்ற அனுமதி தர முடியாது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் மூலப்பொருட்களை வெளியேற்ற அனுமதி தர முடியாது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
Updated on
1 min read

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து மூலப்பொருட்கள், கழிவுகளை வெளியேற்ற அனுமதி தர முடியாது என உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மேலாளர் சுமதி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: கரோனா 2-வது அலை பரவலின்போது, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நடந்தது. தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆக்சிஜன் உற்பத்திக்காக பயன்படுத்திய எண்ணெய்யை வெளியேற்றவும், ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களை சரி செய்யவும் உள்ளூர் உயர்மட்டக் குழு மற்றும் மாவட்ட ஆட்சியரி டம் அனுமதி கேட்கப்பட்டது. இதுவரை அனுமதி தரவில்லை.

எனவே, ஆக்சிஜன் தயாரிப்புக்கு பயன்படுத்திய எண்ணெய் மற்றும் மூலப்பொருட்கள், கழிவுகளை வெளியே கொண்டு செல்வதற்கு அனுமதி தர உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைசுவாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீர கதிரவன், மாவட்ட ஆட்சியரின் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

அதில், ஆலைக்குள் இருக்கும் மூலப்பொருட்களை அகற்ற ஆலை நிர்வாகம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கையை ஏற்க அரசுக்குபரிந்துரை செய்யவில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பரிந்துரை செய்யவில்லை. உச்ச நீதிமன்றத்தில் பிரதான வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலைக்குள் உள்ள கழிவுகள், மூலப்பொருட்களை அகற்ற அனுமதி வழங்க முடியாது எனக் கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்க வேதாந்தா நிறுவனம் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையேற்று விசாரணையை ஒரு வாரத்துக்கு தலைமை நீதிபதி தள்ளி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in