

பத்திரப்பதிவு அலுவலகங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுவதாகவும், இதன் மூலம் புதிதாக 50 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உருவாகும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பதிவுத் துறையின்கீழ் 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இவை சென்னை, மதுரை, கோவை உட்பட 9 மண்டலங்களில் 50பதிவு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 2020-21-ம் ஆண்டில் 26,95,650 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.10,643.08 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
வழிகாட்டி மதிப்பு நிர்ணயம், பதிவு முறையில் மாற்றம் எனப் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும்அதிகாரத்தை பதிவுத் துறை தலைவருக்கு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காகக் கோப்பு காத்திருக்கிறது.
இந்நிலையில் பத்திரப்பதிவு அலுவலகங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இதனால் பொதுமக்கள் பதிவுக்கான சான்றிதழ்களைப் பெறுவது, ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வது, பட்டா மாறுதல் மேற்கொள்வது எனப் பல சேவைகளை எளிதாகப் பெற முடியாத சூழல் உள்ளது.
இக்குறைகளைத் தீர்க்க பத்திரப்பதிவு அலுவலகங்களின் எல்லைகளை மறு ஆய்வு செய்துமாற்றம் கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவின்பேரில் பதிவுத் துறை செயலாளர் ஜோதிநிர்மலாசாமி, தலைவர் ம.ப.சிவனருள் தலைமையிலான அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பதிவுத் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
பல்வேறு ஊர்கள், நகரங்கள் சம்பந்தமே இல்லாத பதிவுஅலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் விட்டு மாவட்டம், வெவ்வேறு தாலுகாக்கள் சார்ந்த பகுதிகள் என இணைக்கப்பட்டதில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. இதை முறைப்படுத்த மாவட்ட வாரியாக அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளில் ஒரே வருவாய் தாலுகாவுக்குள் இருக்கும் வகையிலும், மக்கள்எளிதாக வந்து செல்லும் வகையிலும் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு நகர் மற்றும் கிராமப் பகுதிகள் இணைக்கப்படும்.
இந்த புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்போது மதுரை மண்டலத்தில் தற்போதுள்ள 20 அலுவலகங்களின் எண்ணிக்கை 24 ஆக உயரும். இதேபோல் மாநில அளவில் 50 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உருவாகும். 30 அலுவலகங்கள் அருகில் உள்ள பதிவு அலுவலங்களுடன் இணைக்கப்படலாம்.
மதுரை மாவட்டத்தில் முன்மாதிரியாக திட்டம் தயாரிக்கப்பட்டதும், அதே பாணியில் மாநிலம் முழுவதும் பதிவு அலுவலக எல்லைகள் மாற்றப்படும். இதுகுறித்த அறிவிப்பு முறையாக வெளியிடப்பட்டு, பொதுமக்களின் ஆலோசனைகள், கருத்துகள் பெறப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும் என்றார்.