Last Updated : 28 Sep, 2021 03:18 AM

 

Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM

சந்தைப் பருவ ஆண்டுக்கணக்கை முடிக்க தஞ்சாவூரில் நெல் கொள்முதல் தற்காலிக நிறுத்தம்: மழையால் நெல் குவியல் சேதமடையும் என விவசாயிகள் கவலை

தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காட்டில் நெல் கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகளால் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்.

தஞ்சாவூர்

சந்தைப் பருவ ஆண்டுக்கணக்கை முடிக்க வேண்டி இருப்பதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் வரை (செப்.30) நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு குறுவை சாகுபடி 1.64 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு, 60 சதவீதம் அறுவடை நிறைவடைந்துள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தற்போது நெல்கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன்குடிக்காடு, மருங்குளம், கொல்லங்கரை, ஆழிவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாததால், இங்கு விவசாயிகள் நெல்லை குவியல் குவியலாக கொட்டி வைத்து, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காத்திருக்கின்றனர். அவ்வப்போது மழை பெய்து வருவதால், இங்கு குவித்து வைக்கப்பட்டிருக்கும் நெல்மணிகள் சேதமடையும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து மானாவாரி பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் து.வைத்திலிங்கம் கூறும்போது, "நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லைகொட்டி வைத்துஉள்ள விவசாயிகள், எப்போது நெல் கொள்முதல் செய்யப்படும் என தெரியாமல் காத்திருக்கின்றனர். மழை பெய்தால் இந்த நெல் அனைத்தும் நனைந்து ஈரப்பதம் அதிகரித்து, சேதமாகும் நிலை ஏற்படும். மேலும் பருவ மழைக்காலம் தொடங்க உள்ளதால், நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் என்.உமாமகேஸ்வரி கூறும்போது, ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நிகழாண்டு சந்தைப் பருவத்தில் 11 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது. இதில், இதுவரை 10.50 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது 201 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

சந்தைப் பருவத்தின் (அக்.1 முதல் செப்.30 வரை) கணக்குகளை முடிக்க வேண்டியிருப்பதால், நாளை மறுநாள் வரை (செப்.30) கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. அக்.1-க்கு பிறகு புதிய விலையில் கொள்முதல் நடக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x