

முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 7 மாதகுழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்பிலான மருந்து தேவைப்படுவதால், சிகிச்சைக்கு தமிழக முதல்வர் உதவிட வேண்டி சேலம் ஆட்சியரிடம் குழந்தையின் பெற்றோர் மனு அளித்தனர்.
சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த பூபதி (30), ஜெயந்தி (29) தம்பதியின் 7 மாத பெண் குழந்தை ஸ்ரீஷா. இவர் முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுஉள்ளார். இந்நிலையில், சிகிச்சைக்கு உதவிடக்கோரி, சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குழந்தையின் பெற்றோர் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:
எங்களுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை ஸ்ரீஷா பிறந்தாள். முதல் 4 மாதங்கள் வரை, இயல்பாக இருந்த குழந்தையின் உடல் நிலை பின்னர் பாதிக்கப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம், கைகால் அசைவு குறைவு, கழுத்து நிற்காதது, படுக்கையிலேயே இருப்பது, வளர்ச்சி குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது.
மருத்துவப் பரிசோதனையில் குழந்தைக்கு மிகவும் அரிதான முதுகெலும்பு தசைநார் சிதைவுநோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இந்நோய் ஏற்பட்டுள்ள குழந்தை அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழ முடியும் என மருத்துவர்கள் கூறினர். இதற்கு ரூ.16 கோடி மதிப்பிலான மருந்து (Zolgensma) அளித்து, சிகிச்சை வழங்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வசதியற்ற குடும்ப சூழலில் ரூ.16 கோடி வரை செலவு செய்து, எங்கள் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் இருக்கிறோம். ச்ரொஷாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழக முதல்வர் உதவிட வேண்டுகிறோம். இக்கோரிக்கை அடங்கிய மனுவை சேலம் ஆட்சியரிடம் அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.