

தந்தை கருணாநிதியின் உழைப்பை, முதல்வர் மு.க.ஸ்டாலின் விஞ்சிவிட்டார் என உதகையில் நடந்த நிகழ்ச்சியில் நீலகிரி எம்பி ஆ.ராசா பேசினார்.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு சிறந்த நகராட்சிக்கான விருது வழங்கப்பட்டதற்கு பாராட்டு விழாவும், நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நேற்று நடந்தது. நகராட்சி ஆணையர் ஆர்.சரஸ்வதி வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து பேசினார்.
ஓய்வு பெற்ற பணியாளர்கள் 19 பேருக்கு ரூ.92 லட்சத்து 91 ஆயிரத்து 910, கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன் களப்பணியாளர்கள் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் 307 பேருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் 150 பேருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
நகராட்சி பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி நீலகிரி எம்.பி. ஆ.ராசா பேசும்போது ‘‘திமுக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அயராத உழைப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் விஞ்சிவிட்டார். அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக தமிழக முதல்வரை இந்திய அளவிலான நாளிதழ் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு துறைகளின் மூலம் தொடர்ந்து வளர்ச்சி திட்டப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன,’’ என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரயதர்ஷினி, சார்-ஆட்சியர் மோனிகா ராணா, உதகை நகர காவல் துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.