Published : 28 Sep 2021 03:19 AM
Last Updated : 28 Sep 2021 03:19 AM

அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று சிறுமியின் உடல்நலம் விசாரித்த முதல்வர்: மருத்துவ உதவிகளை அரசு அளிக்கும் என உறுதி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது தாயாருக்கு ஆறுதல் கூறி, மகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசு அளிக்கும் என உறுதியளித்தார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஜனனி. சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்ட சிறுமிக்கு, தாய் ராஜ நந்தினி தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். ஆனால், சில நாட்களில் அந்த சிறுநீரகமும் செயலிழந்துவிட்டது.

மேலும், கல்லீரலும் பாதிக்கப்பட்டது. தனது மகளின் சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு தலைமைச் செயலகத்தில் ராஜ நந்தினி மனு கொடுத்திருந்தார். அத்துடன் தங்களுக்கு உதவி செய்யுமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்து தாயும், மகளும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். இந்த தகவல் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

சிறுமி மற்றும் தாயாரிடம் பேசியமுதல்வர், அவர்களுக்கு ஆறுதல்தெரிவித்து உதவி செய்யப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து, சிறுமி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மருத்துவமனைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிறுமிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், சிறுமிக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார். அப்போது, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மருத்துவமனை டீன் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x