Published : 28 Sep 2021 03:20 AM
Last Updated : 28 Sep 2021 03:20 AM

நாட்டிலேயே முதல் முறையாக பயோ சென்சார் கண்காணிப்புடன் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தொடக்கம்: நவீனமாகும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை

நாட்டிலேயே முதல் முறை யாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமெரிக் கத் தொழில் நுட்பத்தில் உருவாக் கப்பட்ட வயர்லெஸ் பயோ சென்சார் கருவியுடன் கரோனா நோயாளிகளை கண்காணித்து சிகிச்சை அளிக்கும் முறை தொடங்கியது.

‘கரோனா’ தொற்று பேரிடர் காலத்தில் நோயாளிகளை மருத்துவக்குழுவினர் அடிக்கடி அருகே சென்று கண்காணிக்க இயலாது. போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் நோயாளி களுக்கு சிகிச்சை அளித்தாலும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. சிலர் உயிரிழக் கவும் நேரிட்டது. தற்போது கரோனா 3-வது அலை அச்சம் நிலவுகிறது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகா தாரத்துறை முடுக்கி விட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக நாட்டி லேயே முதல் முறையாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் கரோனா நோயாளிகளை அமெரிக்க தொழில் நுட்பத்தில் தயாரான வயர்லெஸ் பயோ சென்சார் கருவியுடன் கண்காணித்து சிகிச்சை அளிக்கும் முறையை கடந்த வாரம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கிவைத்தார்.

தற்போது, இந்த உயர் தொழில்நுட்பக் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கும் முறை நேற்று முதல் தொடங்கியது.

இதுகுறித்து மருத்துவமனை ‘டீன்’ ரத்தினவேலு கூறியதாவது:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு லைப் சயின்ஸ் நிறுவனம் ஆயிரம் வயர்லெஸ் பயோ சென்சார் கருவிகளை வழங்கி உள்ளது. இக்கருவிகள் ஐசியூவில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் உடலில் பொருத்தப்படும். இதன் மூலம் நோயாளியின் சுவாசம், இதயத் துடிப்பு, ஆக்சிஜன் அளவு, வெப்பநிலை உள்ளிட்ட 6 விதமான உடலியக்கச் செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.

மருத்துவமனையில் உள்ள நர்ஸிங் ஸ்டேசனில் வைத்து கருவி மூலம் சேகரிக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து நோயாளிக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கலாம். இந்தக் கருவியை நோயாளியின் உடலில் பொருத்துவதால் எந்தவொரு பிரச்சினையும ஏற்படாது. ஒரு செவிலியர் 50 நோயாளிகளைக் கண்காணிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x