

தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்கு நேற்று அவர் அளித்த பேட்டி:
தேசிய அளவில் நாடு பெரும் சோதனைமிக்க காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. மக்கள் விரோத கொள்கைகளை பாஜக அரசு மூர்க்கத்தனமாக செயல்படுத்துகிறது. விவசாய வளர்ச்சி, கிராமப்புற மேம்பாடு என்று பேசினாலும், கார்ப்பரேட் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமாகவே மத்திய அரசு செயல்படுகிறது.
விவசாயம், தொழில் துறை, உற்பத்தித் துறை, சேவைத் துறை ஆகியன நெருக்கடி நிலையில் இருக்கின்றன. விவசாயத்தில் வருவாய்க்கு உத்தரவாதம் இல்லை. விவசாயிகள் தற் கொலை அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்புகள் உருவாக் கப்படவில்லை. இதனால் சமூகத்தில் குறிப்பாக இளைஞர் கள், மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
தனியார்மயமாக்க முயற்சி
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சி தீவிரமாக நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அரசியல் களத்தின் மையப் பகுதிக்கு வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 80 கோடி மக்களிடம் இருக்கும் சொத்துகளைவிட 100 செல்வந்தர் களிடம் சொத்துகள் அதிகமாக உள்ளன. இச்சூழ்நிலையில் இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள், மதச்சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக பொருளாதார வளர்ச்சி யில் தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. அதை உடைத்து முன்னேற்றப் பாதையில் தமிழகத்தை வழிநடத்த கொள்கை மற்றும் மக்கள் நலனில் அக்கரை கொண்ட அரசு தேவை. இதை முன்வைத்துத்தான் மக்கள் நலக் கூட்டணி தேர்தல் களத்தில் உள்ளது.
மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அணியாக இந்த அணி மாறியிருக்கிறது. மக்களும் இதனை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.
கடிதம் மட்டும் போதாது
தமிழகத்தின் உரிமையையும், சமூக நீதிக் கொள்கையையும் காப்பதற்கு அரசு தவறிவிட்டது. காவிரி நதிநீர் பங்கீடு, மீனவர் நலன், விவசாயிகள் நலன் போன்றவை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினாலோ, பிரதமருக்கு கடிதம் எழுதினாலோ மட்டும் போதாது.
எனவே, மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய, மாநில அரசுகளை மக்கள் தட்டிக்கேட்க வேண்டும் என்றார் டி.ராஜா.
பேட்டியின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.பெரியசாமி, சி.மகேந்திரன், ஜி.பழனிசாமி, கட்சியின் துணை செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.