Published : 27 Sep 2021 07:03 PM
Last Updated : 27 Sep 2021 07:03 PM

ஓசூரில் தொழிற்சங்கங்கள், விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ரயில் மறியல் போராட்டம்: 80 பெண்கள் உட்பட 350 பேர் கைது

ஓசூர் ரயில் மறியல் போராட்டத்துக்கு ரயில் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையில் ஒன்று திரண்ட அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் | படங்கள்: ஜோதி ரவிசுகுமார்.

ஓசூர்

ஓசூரில் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து ஏஐடியூசி, சிஐடியூ, தொமுச, டபிள்யூ பிடியூசி உட்பட அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 80 பெண்கள் உட்பட 350 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூர் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். இதில் தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன்,விவசாய சங்க மாநிலத் துணைத்தலைவர் லகுமைய்யா, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் சேதுமாதவன், இந்திய கம்யூனிஸ்ட் ஓசூர் வட்டச்செயலாளர் பி.ஜி.மூர்த்தி உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டத்தில், 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 300 நாட்களாக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு மதிப்பளித்து உடனே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், காஸ் மீதான வரி உயர்வைக் கைவிட வேண்டும். மின்சார சட்டத்திருத்தம் என்ற பெயரில் மின்சாரத் துறையினைத் தனியாருக்குக் கொடுக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.

நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டு, நாட்டு மக்களுக்கு சேவைத் துறையாக இருந்து வரும் ரயில்வே, இன்சூரன்ஸ், வங்கி, பிஎஸ்என்எல், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பொதுத் துறைகளைத் தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன முழக்கமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின் முடிவில் ஏஐடியூசி, எல்பிஎஃப், சிஐடியூ உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றுதிரண்டு ரயில் மறியலில் ஈடுபட ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். மேலும் ஒரு பிரிவினர் ரயில் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து கண்டன முழக்கமிட்டபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது ஓசூர் டிஎஸ்பி அரவிந்த் தலைமையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் உட்பட 350 பேரைக் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x