

வேலை நிறுத்தப் போராட்டத்தால் புதுச்சேரியில் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்படி உத்தரவாதம் அளிக்கக் கோரியும் கிஷான் முக்தி மோர்ச்சா அமைப்பு நாடு முழுவதும் பந்த் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. புதுவையில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி, ஏஐசிசிடியூ, எல்எல்எப், எம்எல்எப், தொமுச, ஏஐயூடியூசி, விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், இளைஞர், மாணவர் அமைப்புகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
இதன்படி இன்று காலை 6 மணிக்குப் போராட்டம் தொடங்கியது. போராட்டத்தால் புதுவையில் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. தமிழகத்திலிருந்து புதுவைக்கும், புதுவையிலிருந்து தமிழகத்துக்கும் செல்லும் அரசுப் பேருந்துகள், புதுவை அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றுக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்தனர். புதுவையைப் பொறுத்தவரை தனியார் பேருந்துகளே அதிகமாக இருக்கின்றன. அவை முற்றிலும் இயங்கவில்லை. இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளிலும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. வழக்கமாகக் காலை நேரத்தில் பேருந்து நிலையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், மக்கள் நடமாட்டம் குறைந்து பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. டெம்போ, ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை.
நகரப் பகுதியில் நேரு வீதி, மிஷன் வீதி, அண்ணாசாலை, காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலை, புஸ்சி வீதியில் வணிக நிறுவனங்கள், கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், பாகூர், வில்லியனூர் பகுதி மார்க்கெட்டுகளும் அடைக்கப்பட்டிருந்தன. சேதராப்பட்டு, கரசூர், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளும் இயங்கவில்லை.
அரசுப் பள்ளிகள் திறந்திருந்தாலும் மாணவர்கள் வரவில்லை. பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்திருந்தன. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கின. போராட்டத்தையொட்டி அனைத்து சாலை சந்திப்புகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மக்கள் அதிகமாகக் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், முக்கியச் சந்திப்புகளில் கூடுதலாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நகரப் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
15 இடங்களில் மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது
இந்திரா காந்தி சிலை சதுக்கம், ராஜா திரையரங்கச் சந்திப்பு, அண்ணா சிலை, புதிய பேருந்து நிலையம், ராஜீவ் காந்தி சிலை, சேதராப்பட்டு, பாகூர், மதகடிப்பட்டு, வில்லியனூர், திருக்கனூர், காரைக்கால் என 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடந்தது. தொழிற்சங்கத்தினர், விவசாய சங்கத்தினர், பல்வேறு கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கானோர் கைதாகி விடுவிக்கப்பட்டனர்.