

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 3,521 கன அடி தண்ணீர் வெளியேறி வருவதால் குழித்துறை, தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களியலில் அதிகபட்சமாக 172 மி.மீ. மழை பதிவானது.
குமரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாகக் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று மாலையில் இருந்து சாரலுடன் மிதமான மழை பெய்தது. இது இரவில் கனமழையாகக் கொட்டியது. மாவட்டம் முழுவதும் விடிய விடியக் கொட்டிய கனமழையால் ஆறு, கால்வாய்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கனமழையால் குளிரான தட்பவெப்பம் நிலவியது.
அதிகபட்சமாக களியலில் 172 மி.மீ. மழை பெய்திருந்தது. மாவட்டம் முழுவதும் சராசரி மழை விகிதம் 84 மி.மீ. பெய்திருந்தது. பேச்சிப்பாறையில் மழை அளவு குறைந்திருந்தாலும் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான பாலமோர், மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கனமழை கொட்டியதால் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3000 கன அடிக்கு மேல் வந்தது. நேற்று நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை 6000 கன அடிக்கு மேல் தண்ணீர் உள்வரத்தாக வந்திருந்தது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44.37 அடியாக இருந்த நிலையில், அணைப் பகுதிகளில் கண்காணிப்பில் இருந்த பொதுப்பணித்துறை நீர் ஆதாரப் பொறியாளர் குழுவினர், பாதுகாப்பு கருதி விநாடிக்கு 3521 கன அடி தண்ணீரைத் திறந்துவிட்டனர்.
தண்ணீர் திற்பரப்பு அருவி, மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் கரைபுரண்டு ஓடியதால் கரையோரப் பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உபரி நீருடன் மழைநீரும் கலந்து ஓடியதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் திற்பரப்பு அருவியில் அபாயகரமாக தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது. பெருஞ்சாணி நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்த நிலையில் அணைக்கு 1,847 கன அடி தண்ணீர் உள்வரத்தாக வந்தது.
கீரிப்பாறையில் கனமழையால் தற்காலிக மண் பாலம் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நாகர்கோவில் கோட்டாறு, ஒழுகினசேரி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி ஆறு போலக் காட்சியளித்தது. கனமழையால் குமரி மாவட்டத்தில் இன்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதே நேரம் இன்று காலையில் இருந்து மழை இன்றி மிதமான தட்பவெப்பம் நிலவியது. இதனால் மழையால் பேராபத்து எதுவும் நிகழவில்லை.