Published : 27 Sep 2021 04:15 PM
Last Updated : 27 Sep 2021 04:15 PM

மாநிலங்களவை உறுப்பினர்களாக கனிமொழி சோமு, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் போட்டியின்றித் தேர்வு

கனிமொழி சோமு - என்.வி.என்.ராஜேஸ்குமார்: கோப்புப்படம்

சென்னை

மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவைச் சேர்ந்த கனிமொழி சோமு, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் இருவரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதிமுக சார்பாக, மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால், தங்களுடைய எம்.பி. பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அவ்விரு இடங்களும் காலியானதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், அந்த 2 காலி இடங்களுக்கு அக்.4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 9-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இவ்விரு காலியிடங்களில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் 2022, ஜூன் மாதம் மற்றும் கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 2026, ஏப்ரல் மாதம் முடிவடையும்.

இந்நிலையில், இரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலுக்கு திமுக வேட்பாளர்களாக கனிமொழி சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, கனிமொழி சோமு, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் இருவரும் செப். 21 அன்று தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான கி.சீனிவாசனிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். இந்நிலையில், திமுகவுக்குப் போதிய பலம் இருப்பதால், இருவரின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், இருவரும் போட்டியின்றி இன்று (செப். 27) தேர்வானார்கள்.

இது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு தமிழக சட்டப்பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு மாநிலங்களவைக்குத் தனித்தனியாகத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தல்களின் காலியிடங்களின் எண்ணிக்கையும், சட்டப்படி செல்லத்தக்கதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களின் எண்ணிக்கையும் சமமாக இருப்பதால், 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், பிரிவு 53 உட்பிரிவு 2-ன்படியும், 1961-ம் ஆண்டு தேர்தல் நடத்துவது குறித்த விதிகளில் விதி 11, துணை விதி 1-ன்படியும், கே.பி.முனுசாமியின் வெற்றிடத்துக்கு திமுகவின் கனிமொழி என்.வி.என்.சோமுவும், வைத்திலிங்கத்தின் வெற்றிடத்துக்கு கே.ஆர்.என்.ராஜேஸ்குமாரும் போட்டியின்றி அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்".

இவ்வாறு சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x