

உள்ளாட்சித் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையை ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக- அதிமுக தலைவர்கள் தொடங்கினர். புதுச்சேரி நகராட்சியை அதிமுகவும், பாஜகவும் குறிவைத்துள்ளதால் முடிவு எட்டப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
புதுச்சேரியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களுக்கு முதல் கட்டத் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்துள்ள ஆளுங்கட்சிக் கூட்டணி தொடர்ந்தாலும், முதல்வர் ரங்கசாமியின் செயல்பாட்டை அதிமுக வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு குறித்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கூட்டம் முதல்வரும், கூட்டணித் தலைவருமான ரங்கசாமி தலைமையில் ஓட்டல் அண்ணாமலையில் இன்று நடந்தது. கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், வழக்கறிஞர் பக்தவச்சலம், ஜெயபால், பாஜக சார்பில் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநிலத் தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அதிமுக சார்பில் தமிழக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எம்.சி.சம்பத், முன்னாள் எம்.பி. செம்மலை, மாநிலச் செயலாளர்கள் அன்பழகன், ஓம்சக்தி சேகர், மாவட்டச் செயலாளர் ஓமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தொடர்வது என முடிவெடுக்கப்பட்டது. இடப்பங்கீடு தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் உள்ளதால் அடுத்தடுத்த கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.
கூட்டம் முடிந்து வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசித்தோம். விரைவில் முடிவுகளைச் சொல்வோம்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.
பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறும்போது, "உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து போட்டியிடுவோம். எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும். ஓரிரு நாட்களில் இடப்பங்கீடு குறித்த முடிவு செய்யப்படும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார். அதிமுக தரப்பில் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.
கூட்டத்தில் பாஜக- அதிமுக தரப்பில் புதுச்சேரி நகராட்சியைப் பெற்று, போட்டியிட ஆர்வம் காட்டியதாகக் குறிப்பிட்டனர். உயர்மட்டத் தலைவர்களிடம் விசாரித்தபோது, "உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சிகளைப் பங்கீடு செய்வதில் மூன்று கட்சிகளுக்கும் இடையே எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் கூட்டம் நடந்தும் முடிவு எட்டப்படாமல் இழுபறி ஏற்பட்டது. அதனால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. விரைவில் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடக்கும்" என்று தெரிவித்தனர்.