Published : 27 Sep 2021 02:16 PM
Last Updated : 27 Sep 2021 02:16 PM
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கொலைக் குற்றங்களில் குற்றம் சாட்டப்படும் சிறார்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் கொலைக் குற்றத்தில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் 48 கொலைக் குற்றங்களில் சிறார்கள் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 2017-ம் ஆண்டில் 53 கொலைக் குற்றங்களாகவும், 2018-ம் ஆண்டில் 75 ஆகவும், 2019-ம் ஆண்டில் 92 ஆகவும் , 2020-ம் ஆண்டில் 104 குற்றங்களாகவும் அதிகரித்துள்ளன.
2020-ம் ஆண்டில் அதிகரிப்பு
2016-ம் ஆண்டில் 1,603 கொலைகளில் 48 கொலைக் குற்றங்கள் அதாவது 3 சதவீதம் மட்டுமே சிறார்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இது படிப்படியாக அதிகரித்து 2020-ம் ஆண்டில் 1,661 கொலைகளில் 104 குற்றங்களில் அதாவது 6.3 சதவீதம் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
2016-ம் ஆண்டில் 3 சதவீதமாக இருந்தது படிப்படியாக 2017-ல் 3.4%, 2018-ம் ஆண்டில் 4.8%, 2019-ம் ஆண்டில் 5.3%, 2021-ம் ஆண்டில் 6.1% என அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அதிகம்
தேசிய அளவில் கணக்கிட்டால் கொலைக் குற்றங்களில் சிறார்கள் குற்றம் சாட்டப்படும் அளவு கடந்த 2016-ம் ஆண்டில் இருந்ததில் இருந்து 2020-ம் ஆண்டு வரை குறைந்து பின்னர் சற்று அதிகரித்துள்ளது. அதாவது 2016-ம் ஆண்டில் 30,450 கொலை வழக்குகளில் 2.9% சிறார்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
இடைப்பட்ட 2017-ம் ஆண்டில் 28 ஆயிரத்து 653 கொலைகளில் 2.5% எனக் குறைந்தது. 2018-ம் ஆண்டில் 29 ஆயிரத்து 17 கொலைகளில் 2.6% சிறார்களும், 2019-ம் ஆண்டில் 28,918 கொலைகளில் 2.9% மற்றும் 2020-ம் ஆண்டில் 29,193 கொலைகளில் 2.6% சிறார்களும் குற்றம் சாட்டப்பட்டனர்.
ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை கொலைக் குற்றங்களில் சிறார்கள் குற்றம் சாட்டப்படும் அளவு கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
சிறார் குற்றங்கள் அதிகரிப்பு
அதிலும் 2019, 2020-ம் ஆண்டுகளில் ஒட்டுமொத்தக் கொலை வழக்குகள் குறைந்துள்ளன. அதாவது, தமிழகத்தில் 2019-ம் ஆண்டில் 1,745 கொலைகள் நடந்துள்ளன. 2020-ம் ஆண்டில் 1661 ஆகக் கொலைகள் குறைந்துள்ளன. ஆனால், சிறார்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படும் அளவு 2019-ம் ஆண்டில் 92லிருந்து 2020-ம் ஆண்டில் 104 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய சராசரியோடு ஒப்பிடும்போது, தமிழகத்தில் சிறார்கள் கொலைக் குற்றங்களில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படும் அளவு அதிகரித்திருக்கிறது. ஆனால் நாடு முழுவதும் சிறார்கள் கொலைக் குற்றங்களில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படும் சதவீதத்தைக் கணக்கிட்டால் 3 சதவீதத்துக்குள்தான் இருக்கிறது. டெல்லியில் 12.1% சிறார்கள், குஜராத்தில் 6.7%, மத்தியப் பிரதேசம் 6.4% என அதிகமான சதவீதத்தில் சிறார்கள் கொலைக் குற்றங்களில் சேர்க்கப்படுகின்றனர்.
எப்படிக் கணக்கிட்டாலும், சதவீதத்தின் அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் கொலைக் குற்றங்களில் சிறார்கள் ஈடுபடும் சதவீதம் வேகமாக அதிகரித்தது தமிழகத்தில்தான்.
மதுரை நகர்ப்புறத்தில் அதிகம்
சென்னை, மதுரை புறநகர் போலீஸ் எல்லை, மதுரை நகர்ப்புறம், திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் கொலைக் குற்றங்களில் சிறார்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படும் அளவு அதிகரித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டில் தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை நகர்ப்புறத்தில் நடந்த 40 கொலை வழக்குகளில், 8 வழக்குகளில் சிறார்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், இது 20 சதவீதமாகும். சதவீதத்தின் அடிப்படையில் திருச்சியில் 18 கொலை வழக்குகளில் 4 கொலை வழக்குகளில் சிறார்கள் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளனர், ஏறக்குறைய 22.2 சதவீதமாகும்.
சென்னையில் 150 கொலைக் குற்றங்களில் 16 கொலை வழக்கில் மட்டுமே சிறார்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இது 10.7 சதவீதமாகும். அடுத்தபடியாக திருவள்ளூரில் 43 கொலைக் குற்றங்களில் 8 வழக்குகளில் சிறார்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இது 18.6 சதவீதமாகும்.
100 சதவீதம் அதிகரிப்பு
2020-ம் ஆண்டு என்சிஆர்பி அறிக்கையின்படி, குற்றங்களில் சிறார்கள் ஈடுபடும் சதவீதம் 16.4 ஆக இருக்கிறது. தேசிய அளவில் தமிழகம் இதில் 4-வது இடத்தில் இருப்பது கவலைக்குரியதாகும். 18 வயதுக்குக் கீழுள்ள சிறார்கள் ஒரு லட்சம் பேரில் எத்தனை பேர் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கான கணக்கீட்டில் தமிழகத்தில் 16% ஆக இருக்கிறது.
2016-ம் ஆண்டில் 48 கொலைக் குற்றங்களில் சிறார்கள் ஈடுபட்ட நிலையில் இது 2020-ம் ஆண்டில் 100 சதவீதம் அதிகரித்து 104 கொலைக்குற்றங்களாக அதிகரித்துள்ளன.
சமூக விரோதிகள் கைகளில் குழந்தைகள்
தமிழக குழந்தைகள் உரிமைக் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆண்ரூ சேசுராஜ் கூறுகையில், “சமூக விரோத சக்திகள் குழந்தைகளைக் குறிவைத்து சுரண்டலில் ஈடுபடுவது இதில் தெளிவாகிறது. மொபைல் வாங்கவும், பைக் வாங்கவும், அன்றாடத் தேவைகளை நிறைவேற்றவும் வயதுவந்த சிறார்கள் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. ஆனால் கொலைக் குற்றங்களில் சிறார்கள் ஈடுபடும் அளவு அதிகரித்திருப்பது கவலைக்குரியது.
சிறார்கள் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு சிறார் நீதியின் கீழ் தண்டனை வழங்கப்படும், ஆனால், ஐபிசியோடு ஒப்பிடுகையில் சிறார் சட்டத்தின் தண்டனை வலுவிழந்ததுதான்” எனத் தெரிவித்தார்.
கல்வி இடைநிற்றல்
குழந்தைகள் உரிமை ஆலோசகர், சிறார் நீதி வாரியத்தின் முன்னாள் உறுப்பினரான கிரிஜா குமார்பாபு கூறுகையில், “குழந்தைகள் பள்ளியிலிருந்து இடைநிற்றலை அதிகமாகக் கண்காணிக்க வேண்டும். 9-ம் வகுப்பில் கட்டாயம் தேர்வு எழுதவேண்டும் என்பதால், அதற்கு பயந்து, பல மாணவர்கள் 8-ம் வகுப்பிலேயே படிப்பைக் கைவிடுகிறார்கள்.
இவை பதிவு செய்யப்பட்ட வழக்குகள். ஆனால் சிறார்கள் ஈடுபட்ட பதிவு செய்யப்படாத வழக்குகளும் உள்ளன. வயதானவர்களின் கரங்களில் சிறார்கள் சிக்கி, சமூக விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறார்கள். போதைப் பழக்கத்தின் தாக்கம் இல்லாமல் பெரும்பாலான குழந்தைகள் குற்றங்களிலோ அல்லது கொலைக் குற்றங்களிலோ ஈடுபடமாட்டார்கள். சிறார்களுக்கு போதைப் பொருட்கள் கிடைப்பதைத் தடை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ஆங்கில மூலம்: தி இந்து
தமிழில்: க.போத்திராஜ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT