Published : 27 Sep 2021 11:48 AM
Last Updated : 27 Sep 2021 11:48 AM

வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் போராட்டம்: திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள் சாலை மறியல்

திருச்சியில் தெப்பக்குளம் அஞ்சல் நிலையத்தை முற்றுகையிடச் சென்ற பல்வேறு விவசாய அமைப்பினர் மற்றும் தொழிற் சங்கத்தினர். | படம்: ஜி.ஞானவேல் முருகன்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

"3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கைவிட வேண்டும். தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றியதைத் திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல்- டீசல்- சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட்களை 200 ஆக உயர்த்துவதுடன், நகர்ப்புறங்களுக்கு அந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசைக் கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்திருந்தது.

அகில இந்திய விவசாயக் கூட்டமைப்பான 'சம்யுக்த கிசான் மோர்ச்சா' அமைப்பு விடுத்துள்ள இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் பாஜக அல்லாத பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தமிழகத்தில் இந்தப் போராட்டத்துக்கு திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தன.

அதன்படி இன்று (செப். 27) காலை முதல் தமிழகத்தில் பல்வேறு விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி, சென்னை, அண்ணா சாலையில் விசிக, இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும், பல்வேறு தொழிற்சங்கங்களும், அமைப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் கலந்து கொண்டனர். இதில், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப்போராட்டத்தின் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

இதேபோன்று, மதுரை பேருந்து நிலையம் முன்பாக, திமுக, இடதுசாரிக் கட்சிகள், அக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன.

அரியலூரில் 3 வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, முகத்தில் மண்ணைப் பூசி வாய்க்காலில் இறங்கி, விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் தெப்பக்குளம் அஞ்சல் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக பூம்புகார் விற்பனை நிலையம் அருகில் விவசாய சங்கத்தினரும், பல்வேறு தொழிற்சங்கத்தினரும் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் இன்று (செப். 27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் 500-க்கும் அதிகமானோரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

இதேபோன்று, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாய சங்கங்கள், தொழிற்சங்க அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x