Published : 27 Sep 2021 11:09 AM
Last Updated : 27 Sep 2021 11:09 AM

சாதிவாரி கணக்கெடுப்பு; அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தமிழக அரசு நடத்த வேண்டும்: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தமிழக அரசு கூட்ட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 27) வெளியிட்ட அறிக்கை:

"2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முதன்மைக் கோரிக்கையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது சாத்தியமல்ல என்று மத்திய அரசு கூறிவிட்ட நிலையில், அதுகுறித்த தமிழகத்தின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.

2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கையை, பாமக தொடங்கப்பட்ட நாளில் இருந்தே வலியுறுத்தி வருகிறது.

ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, அத்தகைய கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிவிட்டது. மத்திய அரசின் இந்த முடிவு தவறு என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தியுள்ளது.

பாமகவைப் போன்றே சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன், அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடியை அனைத்துக் கட்சிக் குழுவுடன் சந்தித்து வலியுறுத்திய பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், இந்த விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டப்போவதாக அறிவித்துள்ளார்.

சமூக நீதியின் தொட்டில் என்ற பெருமை தமிழகத்துக்கு உண்டு. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான தமிழகத்தின் நிலைப்பாடு என்ன? என்பதை நாட்டுக்கும், மத்திய அரசுக்கும் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். சமூக நீதியைக் காப்பதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான உரிமைப் போரில் தமிழகம்தான் முன்னணியில் இருக்க வேண்டும். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு மறுத்திருப்பது குறித்து தமிழக அரசு இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது இந்தியாவின் இன்றைய தவிர்க்க முடியாத தேவை. இதை சாதி சார்ந்து பார்க்கத் தேவையில்லை. வளர்ச்சி சார்ந்துதான் பார்க்க வேண்டும். இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்களின் வளர்ச்சிக்கும், அவர்களின் வழியாக நாட்டின் வளர்ச்சிக்கும் இட ஒதுக்கீடு கட்டாயம்; அதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கண்டிப்பாகத் தேவை.

மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டங்களும், நிகர்நோக்கு நடவடிக்கைகளும் (Affirmative Actions) சரியானவர்களைச் சென்றடைய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்படும் புள்ளிவிவரங்கள்தான் அடிப்படையாகும். அதனால் 2021-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக மத்திய அரசு நடத்த வேண்டும்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். அவற்றைச் சவால்களாக நினைத்து சாதிப்பதன் மூலம்தான் சமூக நீதியை வெற்றி பெறச் செய்ய முடியும். இதற்காக மத்திய அரசுக்கு அனைத்துத் தரப்பினரும் அழுத்தம் தர வேண்டும்.

2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று இம்மாதத் தொடக்கத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மானியக் கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாக மத்திய அரசிடம் உரிய முறையில் வலியுறுத்த வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கவும், இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டு நிற்கிறது என்பதைக் காட்டவும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

தொடர்ந்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x