Published : 27 Sep 2021 03:20 AM
Last Updated : 27 Sep 2021 03:20 AM

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 3,346 பேர் போட்டியின்றி தேர்வு: களத்தில் 80,819 வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் தொடங்கியது

சென்னை

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதரமாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில்3,346 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது களத்தில் 80,819 வேட்பாளர்கள் உள்ளனர். வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

தமிழகத்தில் விடுபட்டுப்போன காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. அத்துடன் இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் அக்.9-ல் நடக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி 22-ம் தேதிவரை நடந்தது. மொத்தம் 27,791 பதவிகளுக்கு 1 லட்சத்து 698 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 23-ம் தேதி நடந்த பரிசீலனையின்போது 1,246 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.25-ம் தேதி வரை மனுக்களை திரும்பப் பெறஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. 15,287 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெற்றுக்கொண்டனர்.

இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கான சின்னங்களும்ஒதுக்கீடு செய்யப்பட்டன. தேர்தல் நடக்கும் அனைத்து மாவட்டங்களிலும் 3,346 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 ஊராட்சித் தலைவர்கள், 149 ஊராட்சிவார்டு உறுப்பினர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 ஊராட்சித் தலைவர்கள், 186 ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 6 ஊராட்சி தலைவர்கள், 376 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 382 பேரும், தென்காசி மாவட்டத்தில் 6 ஊராட்சித் தலைவர்கள், 400 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 406 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 22 கிராமஊராட்சி தலைவர்கள், 357 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 379 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 29 கிராம ஊராட்சி தலைவர்கள், 453 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 487 பேரும்போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 486 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 179பேர், வேலூர் மாவட்டத்தில் 316 பேர்போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர, மற்ற மாவட்டங்களில் இடைத்தேர்தல் நடக்கும் பகுதிகளிலும் பலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 3 பேரும் திருப்பூர் மாவட்டத்தில் 7 பேரும் சேலம்மாவட்டத்தில் 11 பேரும் ஈரோடு மாவட்டத்தில் 7 பேரும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் 10 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஊராட்சி தலைவர், 33 ஊராட்சி உறுப்பினர்கள், அரியலூர் மாவட்டத்தில் 4 ஊராட்சி உறுப்பினர்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி தலைவர், 3 ஊராட்சி உறுப்பினர்கள்,

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி தலைவர், 17 ஊராட்சி உறுப்பினர்கள், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி தலைவர், 6 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கரூர் மாவட்டத்தில் 5 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 2 ஊராட்சித் தலைவர்கள், 8 ஊராட்சி வார்டுஉறுப்பினர்கள், தருமபுரி மாவட்டத்தில் 6, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 ஊராட்சிவார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வாகினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஊராட்சி தலைவர்கள், 30 ஊராட்சி வார்டுஉறுப்பினர்கள், விருதுநகர் மாவட்டத்தில் 29 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 31 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் 4 கிராம ஊராட்சித் தலைவர், 25 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நீதிமன்ற வழக்கு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தற்போது 24,416 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. களத்தில் 80,819 வேட்பாளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னங்கள் ஒதுக்கீடு எல்லாம் முடிந்துள்ள நிலையில், பிரச்சாரமும் தீவிரமாகி உள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, கடந்த 23, 24 தேதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரில் இருந்து பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார்.

பாமக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி, வரும் 30-ம் தேதி முதல் 3 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அமைச்சர்களும் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய கட்சிகளின் தலைவர்களும் விரைவில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதால் உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x