Published : 27 Sep 2021 03:20 AM
Last Updated : 27 Sep 2021 03:20 AM

திமுக-வைப் பற்றி அவதூறு பேசுவதை பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை

சென்னை

தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காஞ்சிபுரத்தில் பேசிய பழனிசாமி, திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பேசியுள்ளார். மீண்டும் மீண்டும் இவ்வாறு அவர் பொய் கூறி வருகிறார்.

திமுக ஆட்சி அமைந்த 4 மாதங்களில், தேர்தலின்போது அளித்தவாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை எவ்வாறெல்லாம் நிறைவேற்றியுள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், கொடுத்த வாக்குறுதிகளில் எவற்றையெல்லாம் நிறைவேற்றியுள்ளோம், சொல்லாதவற்றை எதையெல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம், ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளில் எந்தெந்த கோப்புகளில் கையெழுத்திடப்பட்டது என்றெல்லாம் முதல்வர் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் பேரவைவிதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டவற்றில் 537 அறிவிப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 348 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிட்டனர். ஆனால், நிதி முழுமையாக ஒதுக்கவில்லை. 143 அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கவேயில்லை. 20 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளன. 26 அறிவிப்புகள் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், எல்லாவற்றையும் நி்றைவேற்றிக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியைப் பார்த்துஅவர் குறைகூறுவது, எள்ளி நகையாடக்கூடியது. தனது தவறுகளை மறைப்பதற்காக, அவர் திமுக ஆட்சி மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற முறைகேடுகள் மூலமாக திமுகவினர் பயன்பெற்றுள்ளனர் என்று அப்பட்டமாக பொய் சொல்லியுள்ளார். கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வழங்குவதில் பெரிய முறைகேடு நடைபெற்றிருப்பதை, திமுக கூட்டுறவுத் துறை அமைச்சர்தான் வெளிப்படுத்தியுள்ளார்.

அதேபோல, உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெறாது என்கிறார். மாநில தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக வைத்திருந்தவர்கள் அதிமுகவினர்தான். தற்போதைய பேரவைத் தலைவர்அப்பாவு வெற்றி பெற்றதை, தோற்றதாக அறிவித்து, ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்தகட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர், ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதுபோல இருக்கிறது.

மாணவர்களுக்கு டேப்லெட் தருவதாக சொன்னார்கள், கடைசிவரை தரவில்லை. அதிமுக ஆட்சியில் ரவுடிகள் ராஜ்ஜியம் தலைதூக்கியது எல்லோருக்கும் தெரியும். எனவே, திமுக பற்றிப்பேசுவதை பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து அவரது முகத்திரையைக் கிழிப்போம்.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x