

மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் சார்பில் வர்த்தக வார விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சி சென்னை தாம்பரம் மெப்ஸ் வளாகத்தில் உள்ள சிடிஎஸ் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய மீன்வளம், கால்நடை, தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
உள்ளூர் தொழில்களை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு சுயசார்பு பாரதம் என்ற சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
கால்நடை, கடல்சார் பொருட்கள் ஏற்றுமதிக்கு இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்திய வேளாண் ஏற்றுமதியில் 17-18 சதவீதம் வரை கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியின் பங்களிப்பு ஆகும். கடல்சார் பொருட்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு 50 சதவீதம் மானியம் அளிக்கிறது.
கால்நடை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கால்நடை நோய்கள் கட்டுப்பாட்டு திட்டம் எனபல்வேறு திட்டங்கள் கால்நடை துறை வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படுகின்றன. ஒரு லட்சம் கால்நடைகள் கொண்ட பகுதியில் நடமாடும் கால்நடை மருத்துவ கிளினிக் (மொபைல் கிளினிக்) இயக்க மத்திய அரசு உதவுகிறது.
இந்திய அளவிலான ஏற்றுமதியில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. சென்னையில் இருந்து கார், உதிரிபாகங்களும், நாமக்கல் பகுதியில் கால்நடை சார்ந்தபொருட்களும், தூத்துக்குடியில் இருந்து கடல்சார் பொருட்களும் அதிக அளவில் ஏற்றுமதியாகின்றன. தமிழகத்தின் ஏற்றுமதி மேம்பாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்துதரும்.
கிராமப் பொருளாதாரம் வளரும்
கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. கிராமப்புறங்களில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது கிராம பொருளாதாரம் வளரும். அதன்மூலம் கிராமங்கள் வளர்ச்சி அடைவதோடு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
‘மேட் இன் இந்தியா’என்று பெருமையாக கூறிக்கொள்ளும் வகையில் இந்தியாவில் இருந்து சிறப்புமிக்க பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நிலை உருவாக வேண்டும். நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம், மீனவ பெண்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், விவசாய உற்பத்தியாளர் குழுவினர் பெரி தும் பயனடைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.