Published : 27 Sep 2021 03:20 AM
Last Updated : 27 Sep 2021 03:20 AM

கரோனா தடுப்பூசி செலுத்தியோருக்கு மட்டும் ஒகேனக்கல்லில் இன்று முதல் அனுமதி: அருவி, ஆற்றில் குளிக்க அனுமதியில்லை

உலக சுற்றுலா தினமான இன்று (27-ம் தேதி) முதல் கரோனா தடுப்பூசி இரு தவணை செலுத்திய பயணிகள் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வர அனுமதியளிக்கப்படுகிறது. அதே நேரம் அருவி மற்றும் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதியில்லை.

இதுதொடர்பாக தருமபுரி ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதி மக்களின் வாழ்வாதாரம், பொதுமக்களின் சுற்றுலா ஆர்வம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி உலக சுற்றுலா தினமான இன்று (27-ம் தேதி) முதல் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒகேனக்கல்லில் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

தினமும் காலை 6 முதல் மாலை 6 மணி வரை ஒகேனக்கல் சுற்றுலா தலம் இயங்கும். கரோனா தடுப்பூசி 2 தவணையும் செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சுற்றுலா வருவோரிடம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றை ஒகேனக்கல் வரும் வழியில் உள்ள மடம் மற்றும் ஒகேனக்கல் பேருந்து நிலையம், ஆலம்பாடி ஆகிய இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனை செய்யப்படும்.

ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டுநர்கள், எண்ணெய் மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், வணிகர்கள் என அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அனைவரும் முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். தடை செய்யப்பட்ட பாலித்தீன் பை போன்றவற்றின் பயன்பாட்டை பயணிகள் தவிர்த்து, ஒகேனக்கல்லை தூய்மையாக பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும்.

பயணிகள் பரிசலில் பயணித்து காவிரியாற்றின் அழகை ரசிக்க மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. பரிசல் பயணத்துக்கு லைப் ஜாக்கெட் கட்டாயம் அணிய வேண்டும். அருவி, ஆற்றங்கரையோரப் பகுதிகளில் குளிக்க அனுமதி இல்லை. மாலை 4.30 மணிக்கு பின்னர் மடம் சோதனைச் சாவடி பகுதியில் தனியார் வாகனங்கள் ஒகேனக்கல் நோக்கி செல்ல அனுமதி கிடையாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x