

அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தில் முதல் நாளான நேற்று 30 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.10 கோடி செலவில் ‘அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்’, ‘அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம்’ ஆகிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்த 2 திட்டங்களும் நேற்று முதல் செயல்படத் தொடங்கின. நேற்று மட்டும் 30 பேர் முழு உடல் பரிசோதனை செய்துகொண்டனர்.
இதுதொடர்பாக அரசு பொது மருத்துவமனை டீனும், மருத்துவக் கல்வி இயக்குநருமான (டிஎம்இ) டாக்டர் ஆர்.விமலா கூறியதாவது:
ஏழை எளிய மக்களுக்காக குறைந்த கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ‘அம்மா கோல்ட்’ பரிசோதனைக்கு ரூ.1,000, ‘அம்மா டைமண்ட்’ பரிசோதனை ரூ.2,000, ‘அம்மா பிளாட்டினம்’ பரிசோதனை ரூ.3,000 என மூன்று வகையாக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தினமும் 100 பேருக்கு முழு உடல் பரிசோதனை செய்வதற்கான வசதிகள் இருக்கிறது. ஆனால், முதல் நாளில் 30 பேர் முழு உடல் பரிசோதனையை செய்துகொண்டனர்.
அம்மா முழு உடல் பரிசோதனை தனி கட்டிடத்தில் இயங்குகிறது. முழு உடல் பரிசோதனை செய்ய விரும்புபவர்கள் காலையில் வெறும் வயிற்றுடன் வரவேண்டும். காலை 8 மணிக்கு வந்து பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன்பின் பரிசோதனைகள் செய்யப்படும். காலை உணவு வழங்கப்படும். மதியத்துக்குள் வீட்டுக்கு சென்றுவிடலாம். மறுநாள் வந்து பரிசோதனை முடிவுகளை காட்டி டாக்டர்களின் ஆலோசனை பெறலாம். பரிசோதனை முடிவில் உடலில் பிரச்சினை இருப்பது தெரிந்தால், இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்.
அம்மா முழு உடல் பரிசோதனைக்காக ஆன்லைனில் பதிவு செய்யும் முறை ஓரிரு நாளில் நடைமுறைப்படுத்தப்படும். பரிசோதனை முடிவுகள், ஆன்லைனிலும் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.