

சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல்துறை சார்பில், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, கரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சைக்கிள் பயணம் நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று காலை நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி, ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின்கீழ் பொதுமக்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி பல்வேறு சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் மாநகரில் ஒரு வார காலத்துக்கு சைக்கிள் பயணம், பூங்காக்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம், கரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சனிக்கிழமை இரவு 10 மணிக்கு பெண்கள் மட்டும் பங்கேற்ற சைக்கிள் பயணம் மெரினா காந்தி சிலை அருகில் தொடங்கியது. மாநகராட்சி துணை ஆணையர் டி.சினேகா, மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் திஷா மிட்டல் ஆகியோர் இந்த சைக்கிள் பயணத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
இந்த பயணம் சென்ட்ரல் ரயில் நிலையம், அமைந்தகரை ஸ்கைவாக், நுங்கம்பாக்கம், ஜெமினி மேம்பாலம், ராதாகிருஷ்ணன் சாலை வழியாக மீண்டும் காந்தி சிலை அருகில் முடிவடைந்தது. இதில் பெண்கள் மற்றும் ஏராளமான பெண் காவலர்கள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து நேற்று காலை மெரினா கடற்கரை, டிஜிபி அலுவலகம் அருகில், வேளச்சேரி, பெசன்ட் நகர், ரிப்பன் மாளிகை, அடையார் புற்றுநோய் மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் இருந்து சைக்கிள் பயணம் தொடங்கியது. இதில் 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மகளிர் பங்கேற்றனர். மேலும் மாநகராட்சி சார்பில் பெரியமேடு மை லேடி பூங்கா, மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா உள்ளிட்ட 29 பூங்காக்களில் சிலம்பம், யோகா, ஜூம்பா போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டன.