Published : 27 Sep 2021 03:21 AM
Last Updated : 27 Sep 2021 03:21 AM

தாம்பரம் பகுதியில் தடுப்பூசி முகாம்: தலைமைச் செயலர் ஆய்வு

தாம்பரம் அருகே பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களில், தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 24.57 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 19.16 லட்சம் பேர் உள்ளனர். இதில் முதல் தவணை கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் 10.88 லட்சம் பேர். இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் 4 லட்சம் பேர்.

நெமிலிச்சேரி ஏரி

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 485 முகாம்களும், நகர்புற பகுதிகளில் 119 முகாம்கள் என மொத்தம் 604 தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாமில் 4,500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த முகாமில் தாம்பரம் அருகே பல்லாவரம், அஸ்தினாபுரம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களில் தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பல்லாவரம் அருகே நெமிலிச்சேரி ஏரியில் படந்திருக்கும் ஆகாயத் தாமரை அகற்றும் பணியையும், கரைகளை பலப்படுத்தும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் வேளாண்மை - உழவர் நலத்துறை அரசு செயலருமான சி.சமயமூர்த்தி, தமிழக அரசு பொதுத்துறை செயலர் டி.ஜகநாதன், செங்கல்பட்டு மாவட் ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x