

கலப்புத் திருமணம் செய்ததால், உடுமலையில் சங்கர் கொலை செய்யப்பட்டார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரது மனைவி கவுசல்யாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவருமான ஆர்.நல்லக்கண்ணு நேற்று, இயக்கத்தின் சார்பில் ரூ.30 ஆயிரம் நிதியுதவி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் நல்லகண்ணு கூறும்போது, ‘‘தமிழகத்தில் சங்கரின் படுகொலை, ஆணவக் கொலைகள் பட்டியலில் 81-வது சம்பவம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்.
தேமுதிக இணைந்திருப்பதால் மக்கள் நலக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகியுள்ளது. இக்கூட்டணியை ‘விஜயகாந்த் கூட்டணி’ என்று விஜயகாந்தும் கூறவில்லை, நாங்களும் கூறவில்லை.
பாஜக, காங்கிரஸை முறியடிக்க வேண்டும், 50 வருடங்களாக ஊழலில் திளைக்கும் திமுக, அதிமுகவை அகற்ற வேண்டும் என்ற எங்களின் கொள்கையையே விஜயகாந்தும் முன்னெடுத்திருக்கிறார். அதன் காரணமாகவே அவர் எங்களுடன் இணைந்திருக்கிறார். தமாகா உள்ளிட்ட கட்சிகளும் எங்களுடன் இணைய வேண்டுமென முயற்சிக்கிறோம்.
பலமுனைப் போட்டியால் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அமைந்துவிடும் என்பது உண்மையல்ல. எங்கள் கூட்டணிதான் வலுவடைந்துள்ளது. எங்களுக்கும், அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி இருக்கும்.
குறைந்தபட்ச செயல்திட்டத்தை வெளியிட்டு 4 சுற்று பிரச்சாரத்தை முடித்துள்ளோம். தற்போது தேமுதிகவும் இணைந்துள்ளதால், அதில் எவை சாத்தியம் என்பதையறிந்து மற்றொரு தேர்தல் அறிக்கை வெளியிடுவோம்.
இலவசங்களைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்பதை அனுமதிக்கக்கூடாது. ரூ.29 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது என்பதற்காக மதுவை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.