

நிலக்கோட்டை அருகே தாய், மகன், மகள் தூக் கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரபோஸ்(40). காய்கறி வியாபாரி. இவரது மனைவி முருகேஸ்வரி(35), மகன் சந்தோஷ்(15), மகள் சவுந்தர்யா(13). சந்திரபோஸ் காய்கறி வியாபாரத்துக்காக அருகில் உள்ள கிராமத்துக்கு நேற்று காலை சென்றார்.
தராசை வீட்டில் வைத்துவிட்டு வந்ததை அறிந்த அவர், மொபைல் போனில் மகனை தொடர்பு கொண்டு தராசை கொண்டு வருமாறு தெரிவித்தார். சந்தோஷ் தராசை எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். இந்நிலையில், வீட்டின் கதவு நீண்ட நேரமாகப் பூட்டியிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். தாய், மகன், மகள் ஆகியோர் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.