Published : 26 Sep 2021 04:37 PM
Last Updated : 26 Sep 2021 04:37 PM

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரேடியோ தெரபி சிகிச்சைப் பிரிவு விரைவில் தொடக்கம்: மா.சுப்பிரமணியன்

திருச்சி

புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரேடியோ தெரபி சிகிச்சைப் பிரிவு விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றார் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தமிழ்நாட்டில் இன்று மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில், திருச்சி வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது:

"தமிழ்நாட்டில் செப்.12-ம் தேதி 28.91 லட்சம் பேருக்கும், செப்.19-ம் தேதி 16.43 லட்சம் பேருக்கும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. தொடர்ந்து, இன்று 20 ஆயிரம் மையங்களில் 15 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரேடியோ தெரபி சிகிச்சைப் பிரிவைத் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு கோரிக்கை விடுத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து, சிகிச்சைப் பிரிவு தொடங்க அனுமதி அளித்து, செப்.21-ம் தேதி அரசாணை வெளியிட்டு, ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ரேடியோ தெரபி சிகிச்சைப் பிரிவுக்கான மருத்துவ உபகரணங்களை வாங்கும் நடவடிக்கைகளில் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் ஈடுபட்டுள்ளது. இங்கு ரேடியோ தெரபி சிகிச்சைப் பிரிவு 25 நாட்களில் பயன்பாட்டுக்கு வரும்.

நீட் தேர்வெழுதிய மாணவர்களில் மன உலைச்சால் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், முதல்வர் மு.க.ஸ்டாலினை மிகுந்த மனவருத்தத்துக்கு உள்ளாக்கியது. இதையடுத்து, தமிழ்நாட்டில் நீட் தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரையும் கண்டறிந்து, அவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் கவுன்சிலிங் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதன்படி, தமிழ்நாட்டில் நீட் தேர்வெழுதிய 1,10,971 பேரின் தொடர்பு எண்களைப் பெற்று, மன நல மருத்துவர்கள், மன நல ஆலோசகர்கள் 333 பேர் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். 20 சதவீதம் பேரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், 80 சதவீதம் பேருக்கு இதுவரை ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், கடும் மன அழுத்தத்தில் உள்ளதாக கண்டறியப்பட்ட 200 பேருக்கு மீண்டும் மீண்டும் ஆலோசனை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. தேர்வெழுதிய அனைவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன நல ஆலோசனை வழங்கியது நாட்டிலேயே தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நல்ல நடைமுறை. தொடர்பு கொள்ள முடியாதவர்களை தொடர்ந்து முயற்சி செய்து தொடர்பு கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

செப்.11-ம் தேதி வரை தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் சதவீதம் 47 ஆக இருந்த நிலையில், செப்.12-ம் தேதி நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமுக்குப் பிறகு 54 சதவீதமாகவும், செப்.19-ம் தேதி 56 சதவீதமாகவும் உயர்ந்தது. இன்றை 3-வது கரோனா தடுப்பூசி முகாமில் இலக்கை எட்டினால் முதல் தவணை செலுத்தியவர்கள் சதவீதம் 60-ஐ கடக்கும்.

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பது உண்மை. எனவே, தமிழ்நாட்டுக்கு வாரத்துக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் அளிக்க வேண்டும் என்று கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதோடு நின்றுவிடாமல் கடந்த 3 நாட்களுக்கு முன் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மூலம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடமும் நேரில் வலியுறுத்தப்பட்டது. அந்தவகையில், வரப்பெற்ற 28 லட்சம் தடுப்பூசிகள்தான் அனைத்து மாவட்டங்களுக்கம் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. கோவாக்சின் தடுப்பூசி அனைத்து மையங்களிலும் கையிருப்பில் உள்ளன.

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தீர்மானம், குடியரசுத் தலைவரைச் சென்றடைந்தவுடன், அதுதொடர்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்” என்றார்.

அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, "முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணையின்போது தேர்தலை எந்தத் தேதியில் நடத்துவது என்று கூறவுள்ளோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x