

ஜோலார்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரின் மகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற்றுள்ளார். அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய குடிமை பணிக்கான (யுபிஎஸ்சி) தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. 2020-ம் ஆண்டு நடைபெற்ற இத்தேர்வில் நாடு முழுவதிலும் 545 ஆண்கள், 216 பெண்கள் என மொத்தம் 761 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில், ஜோலார்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த சூர்யா என்ற இளம்பெண் சிவில் சர்வீஸ் தேர்வில் 576 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டு பகுதியை சேர்ந்தவர் உமாகண்ணுரங்கம். இவர் ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளராக உள்ளார். கடந்த 1996 – 2001-ம் ஆண்டு கூத்தாண்டு குப்பம் ஊராட்சி மன்ற தலைவியாக பொறுப்பு வகித்துள்ளார்.
அப்போது இந்தியாவின் சிறந்த பெண்மணி என்ற தேசிய விருதும் (தேசிய பெண்கள் ஆணையம்), வளர்ச்சிப் பணிகள் விரைவாக மேற்கொண்டது, ஊழலற்ற சிறந்த நிர்வாகம் செய்தற்காக சிறந்த ஊராட்சி மன்ற தலைவி என்ற விருதினை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்யிடம் இவர் பெற்றுள்ளார்.
உமாகண்ணுரங்கத்துக்கு, கனிமொழி (30),சூர்யா (27) என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கனிமொழி எம்.இ., பி.எச்.டி முடித்துள்ளார். இளைய மகள் சூர்யா, உணவு தொழில்நுட்பம் மற்றும் பொலிட்டிக்கல் சயின்ஸ் கல்வியை முடித்து கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் மண்டல அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பள்ளி பருவத்தில் இருந்தே சூர்யா ஐஏஎஸ் அதிகாரியாக வர வேண்டும் என்ற கனவுடன் தன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்தார். தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தாலும், ஐஏஎஸ் ஆவதற்கான பயிற்சிகளை அவர் எடுத்து வந்தார். 2020-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்து கொண்ட சூர்யா அத்தேர்வில் வெற்றிப்பெற்றுள்ளார்.
இது குறித்து சூர்யா கூறியதாவது, ‘ ஐஏஎஸ் என்பது எனது லட்சியம், சிறு வயது முதல் கனவு. அதற்கான முயற்சியும், பயிற்சியும் நான் தொடர்ந்து எடுத்து வந்தேன். யுபிஎஸ்சி தேர்வில் ஏற்கெனவே மூன்று முறை தேர்வு எழுதியுள்ளேன். தொடர்ந்து நான்காவது முறை எழுதி தற்போது தேர்ச்சி பெற்றுள்ளேன். இந்தத் தருணம் மகிழ்ச்சியானது.
ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காக நாள் தோறும் 8 முதல் 10 மணி நேரம் வரை படிப்பேன். ஓய்வு கிடைக்கும்போது, முழு கவனமும் படிப்பில் செலுத்தினேன். வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டேன். அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் மட்டும் அல்ல எந்த தேர்வாக இருந்தாலும், விடா முயற்சியுடன் கவனத்துடன் படித்தால் எவ்வளவு கடினமான கேள்வி கேட்டாலும் நம்மால் எளிதல் பதிலளிக்க முடியும்.
இன்றைய மாணவர்கள் பொறுப்புடன் கவனம் சிதறாமல் படித்தால் வாழ்க்கையில் எளிதாக வெற்றிப்பெறலாம். ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டுக்கும், மக்களுக்கு சிறப்பான பணியை செய்வேன். குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வேன்’’ என்றார் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற்றுள்ள சூர்யாவுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.