தமிழ்நாட்டில் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் 5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தஞ்சாவூர் அருகே மொன்னையம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை பார்வையிட்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
தஞ்சாவூர் அருகே மொன்னையம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை பார்வையிட்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
Updated on
1 min read

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் 5 கோடியை எட்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே மொன்னையம்பட்டியில் இன்று 26 தேதி நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமைப் பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது

தமிழ்நாட்டில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் மூன்றாவது மாபெரும் மெகா முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்று தடுப்பு ஊசியை செலுத்திக் கொள்ள வருகின்றனர். இன்று மட்டும் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 4.43 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் 5 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரந்தோறும் மத்திய அரசிடம் இருந்து 50 லட்சம் தடுப்பூசிகள் கேட்கப்பட்டுள்ளது. அடுத்த வாரமும் 50 லட்சம் தடுப்பூசிகள் வரப் பெற்றால் அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் மாபெரும் முகாம் நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் இதுவரை 500-க்கும் அதிகமான கிராமங்களில் நூறு சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 21 கிராமங்களில் 100 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

தமிழக முதல்வர் தொடங்கி வைத்த மக்களைத் தேடி மருத்துவ முகாம் மூலம் 11.04 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

நீட் தேர்வில் பங்கேற்ற 1.10 லட்சம் பேருக்கு மன நல மருத்துவர்கள், ஆலோசகர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.

பின்னர், நூறு சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட ஊராட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in