

முதியவர்களுக்கு முக்கியமாக கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, “ கரோனாவின் முதல் இரண்டு அலைகளில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் மற்றும் பிற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள்தான்.
முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது முக்கியம். அவர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை அதனால அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாது என்பது தவறு. வெளியே சென்று வீடு திரும்புபவர்களால் அவர்களுக்குத் தொற்று ஏற்படும்.
வீடு தேடி முதியவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது சென்னையில் உள்ளது. பிற பகுதிகளில் வீடுகளுக்கு அருகில் முகாம் அமைத்து முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. முதியவர்களின் நோய் எதிர்ப்புத் தன்மையும் நம் அளவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்றார்.