Published : 26 Sep 2021 12:31 PM
Last Updated : 26 Sep 2021 12:31 PM

ஆவின் தரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட  வேண்டும் : பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை

ஆவின் தரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து பால் முகவர்கள் சங்கம் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில், “

தாய்ப்பாலுக்கு நிகரான பால் என தமிழக அரசால் விளம்பரப்படுத்தப்படும் ஆவின் பால் நிறுவனத்தில் மதுரை, சேலம், வேலூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் எடுக்கப்பட்ட சுமார் 10,295 பால் மாதிரிகளில் 51% பால் மாதிரிகள் அரை மணி நேரத்தில் கெட்டு விடக் கூடியதாக தரம் குறைந்து இருந்ததாக கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள தணிக்கைத்துறை ஆய்வறிக்கை தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

மேலும் அந்த தணிக்கைத்துறை ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் ஆவின் பால் தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள தணிக்கைத்துறை ஆய்வறிக்கை கடந்த 2019ம் ஆண்டில் எடுக்கப்பட்ட பால் மாதிரிகளின் முடிவுகளை கொண்டதாக தெரிவித்திருப்பதை வைத்து பார்க்கும் போது 2019ம் ஆண்டின் ஆய்வறிக்கை சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து 2021ம் ஆண்டு முடிவடையும் தருவாயில் வெளியிடப்பட வேண்டிய அவசியம் என்ன..? என்கிற மிகப்பெரிய கேள்வி எழுவதோடு கடந்த கால அதிமுக ஆட்சியில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல், முறைகேடுகளை சத்தமின்றி மூடி மறைக்க பழைய ஆய்வறிக்கை தூசி தட்டி வெளியிடப்பட்டுள்ளதோ என்கிற சந்தேகம் எழுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

மேலும் ஏற்கனவே மதுரை, கோவை, வேலூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் ஆவின் பால் கெட்டுப் போன சூழலில் தற்போது வெளியாகியுள்ள தணிக்கைத்துறை ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ள ஆவின் பாலின் தரம் குறித்த தகவல் உண்மையாகவும் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

எனவே தற்போது வெளியாகியுள்ள ஆவின் பால் தரம் தொடர்பான தணிக்கைத்துறை ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள எட்டு மாவட்டங்களில் எந்தெந்த தேதிகளில், எந்தெந்த பகுதிகளில் இருந்து பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது..? பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்திய தரம் குறித்த ஆய்வு முடிவுகள் குறித்த அறிக்கையை உடனடியாக வெளியிடாமல் இரண்டு ஆண்டுகள் கடந்து வெளியிட்டதின் பின்னணி என்ன..? உண்மையில் ஆவினில் நடப்பது என்ன..? என்பது குறித்த முழுமையான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

அதுமட்டுமின்றி கடந்த 2017ம் ஆண்டு தனியார் பால் நிறுவனங்கள் மீது அவதூறு சேற்றை ராஜேந்திர பாலாஜி அள்ளி வீசிய நிலையில் தாய்ப்பாலுக்கு நிகரான பால் ஆவின் என கூறப்படும் நிலையில் அதன் தரம் குறித்து ஒவ்வொரு வாடிக்கையாளரும் தெரிந்து கொள்ள நினைப்பது அவர்களின் உரிமையாகும்.

ஆவினும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதல்ல என்பதால் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு துறை சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையங்கள், பால் மொத்த குளிர்விப்பான் நிலையங்கள் மற்றும் ஆவின் பால் பண்ணைகளில் பால் மாதிரிகளை சேகரித்து அதன் தரம் குறித்து முழுமையாக ஆய்வு செய்து எந்தவிதமான ஒளிவு மறைவின்றி வெளிப்படைத்தன்மையோடு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x