Published : 26 Sep 2021 11:22 AM
Last Updated : 26 Sep 2021 11:22 AM

உ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு வாரியத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குறியது. உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெறவேண்டும் என மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ரயில்வே அமைச்சருக்கும், தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கும் எழுதியுள்ள கடிதத்தில், "2018 ல் ரயில்வே வாரியம் உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கும் டெக்னீசியன் காலியிடங்களுக்கும் விண்ணப்பங்களைக் கோரியிருந்தது.

தெற்கு ரயில்வேயில் 761 உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரி இருந்தது. விண்ணப்பதாரர்கள் ஒரு ரயில்வேக்கு தான் விண்ணப்பிக்க முடியும். எந்த மொழியில் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். எந்த ரயில்வேக்கு தேர்வு எழுதுகிறார்களோ அந்த ரயில்வேக்கு தான் அவர்கள் நியமிக்கப்பட வேண்டும். வேறு ரயில்வேக்கு அவர்கள் நியமிக்கப்படக்கூடாது.

ஆனால், உத்தரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரை தெற்கு ரயில்வேயில் உள்ள 51 இடங்களில் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் மதிப்பெண்கள் தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை விட குறைவானதாகும்.

அதுமட்டுமல்ல இதர ரயில்வேயில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேயில் நியமிப்பது சட்ட விரோதமாகும். ஏற்கெனவே டெக்னீசியன் கேட்டகரியில் தெற்கு ரயில்வேக்கு விண்ணப்பித்தவர்களில் 60% பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் வந்துள்ளார்கள்.

இந்த உதவி ஓட்டுநர் பதவிக்கு 13% பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் வந்துள்ளார்கள். இது ரயில்வே அமைச்சர் எனக்கு கொடுத்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களைப் புறக்கணித்து கோரக்பூர் ரயில்வேயில் தேர்வு செய்யப்பட்டவர்களை செய்யப்பட்டவர்களை நியமிப்பது தெற்கு ரயில்வே விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பை பாதிப்பதோடு ஜனநாயக அமைப்பை சீர்குலைப்பதாகவும் இருக்கிறது.

ரயில்வே அமைச்சர் உடனே தலையிட்டு கோரக்பூர் விண்ணப்பதாரர்களை கோரக்பூர் திருப்பி அனுப்பவும் தெற்கு ரயில்வேயின் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை அந்த உதவி ஓட்டுனர் காலியிடங்களில் நிரப்பவும் கோருகிறேன்.

இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x