Last Updated : 03 Mar, 2016 08:34 AM

 

Published : 03 Mar 2016 08:34 AM
Last Updated : 03 Mar 2016 08:34 AM

இறுதிக்கட்டத்தில் கூட்டணி பேச்சு: தேமுதிகவுக்கு 55 தொகுதிகள்?

திமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், தேமுதிகவுக்கு 55 தொகுதிகளை விட்டுத் தர திமுக சம்மதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற நிலையில் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. 2011 சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல் என தொடர் தோல்விகளைச் சந்தித்த திமுகவுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிமுகவை தோற்கடிக்கும் வகையில் வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பே திமுக தொடங்கியது. எப்படியாவது தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என முடிவு செய்து காய்களை நகர்த்திவந்தது.

ஆனால், எவ்வளவு முயன்றும் தேமுதிகவுடன் உடன்பாட்டை எட்டமுடியவில்லை. திமுக தரப்பில் சில மூத்த தலைவர்களும், ஸ்டாலின் குடும்பத்தினரும் விஜயகாந்த் குடும்பத்தினருடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக இருதரப்பில் இருந்தும் செய்திகள் வெளியாகின.

எடுத்த எடுப்பிலேயே பிஹார் பாணியில் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற விஜயகாந்த், 100 தொகுதிகள், துணை முதல்வர், 10 அமைச்சர்கள், உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக தலைமை, 50 தொகுதிகள் தருவோம், ஆட்சியில் பங்கு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசிக் கொள்ளலாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்தே பாஜக, மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை சந்தித்து விஜயகாந்த் பேசியுள்ளார். பிறகு கொஞ்சம் இறங்கி வந்த விஜயகாந்த் ஆட்சியில் பங்கும், குறைந்தது 70 தொகுதிகள் வேண்டும் என கேட்டுள்ளார். இதையும் திமுக ஏற்கவில்லை.

இந்நிலையில் திமுகவுக்கு நெருக்கமான 2 தொழிலதிபர்கள், விஜயகாந்தை சந்தித்து, ''திமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே அதிமுகவை தோற்கடிக்கவும், கணிச மான எம்எல்ஏக்களை பெறவும் முடி யும். பாஜக அல்லது மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்தால் அது அதிமுகவுக்கு சாதகமாகிவிடும். ஒரு தொகுதியில்கூட வெற்ற பெற முடியாது’’ என்பதை எடுத்துக் கூறியுள்ளனர்.

ஆனாலும் 60 தொகுதிகளும், ஆட்சியில் பங்கு என்ற உத்தரவாதமும் அளித்தால் மட்டுமே கூட்டணி என்பதில் விஜயகாந்த் விடாப்படியாக இருந்துள்ளார். இதற்கிடையே, மத்திய அமைச்சர் ஜவடேகர், விஜயகாந்தை சந்தித்துப் பேசியது திமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூட்டணிப் பேச்சுவார்த்தையை இனியும் இழுத்தடிப்பது சரியாக இருக்காது என்ற முடிவுக்கு வந்தது.

அதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் திமுக குறைந்தது 145 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும் மீதமுள்ள 89 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தருவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதில், 55 தொகுதிகளை தேமுதிகவுக்கு விட்டுத் தர திமுக சம்மதித்தி ருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக திமுக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தேமுதிக உடனான கூட்டணி பேச்சு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கூட்டணி அரசு குறித்து தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே முடிவு செய்ய முடியும். அதிமுகவை தோற் கடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் கூட்டணி அமைக்கவே திமுக விரும்புகிறது. இதே இலக்குடன் உள்ள தேமுதிக திமுக கூட்டணியில் இணைவது உறுதி. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x