

உலக மருந்தாளுநர்கள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை அரசு பொது மருத்துவமனையில் பட்டதாரி மருந்தாளுநர் சங்கங்கள் சார்பில் ரத்த தான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கரோனா தொற்று பாதிப்பு, பல்வேறு நடவடிக்கைகள் மூலம் குறைந்தது. 1,500 என்ற அளவில் இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை தற்போது 1,700 ஆக அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது.
விழாக்கள், நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டமாகக் கூடுவது, முறையாக முகக்கவசம் அணியாதது போன்ற காரணங்களால் தொற்று அதிகரிக்கிறது. காய்ச்சல் வந்தஉடனேயே தாமதம் செய்யாமல் மருத்துவ மனைக்கு மக்கள் செல்ல வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொண்டு அடுத்த ஒரு மாதத்துக்குள் அனைவரும் தாமாக முன்வந்து முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய அளவில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதால், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வு தரும் வகையில் திங்கள்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது.
மருத்துவக் காப்பீடுகள் குறித்த கூட்டம் சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் விரைவில் நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.