Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு: ஏப்ரல் 1 முதல் முன்தேதியிட்டு வழங்க உத்தரவு

சென்னை

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை முன்தேதியிட்டு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் நிறுவனத்தில் 6,761 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரத்து 90 விற்பனையாளர்கள், 3158 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 25 ஆயிரத்து 9 பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப் பேரவையில் கடந்த 7-ம் தேதி அறிவித்தார். இந்தநிலையில், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுப்பிரமணியன் முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறி விக்கப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் கடையின் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.12,750-ல் இருந்து ரூ.13,250, விற்பனையாளர்களுக்கு ரூ.10,600-ல் இருந்து ரூ.11,100, உதவி விற்பனையாள ருக்கு ரூ.9,500-ல் இருந்து ரூ.10,000 தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. எனவே, முதுநிலை மண்டல மேலாளர்களும், மாவட்ட மேலா ளர்களும் தொகுதிப்பூதிய உயர்வை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் மேலாண்மை இயக்குநர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x