

சென்னையை சேர்ந்த 2 நிதி நிறுவனங்களுக்கு சொந்தமான 35 இடங்களில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.300 கோடி வருவாயை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட முயன்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த 2 பிரபல தனியார் நிதி நிறுவனங்களிலும், அந்த நிறுவனங்களின் கீழ் செயல்படும் பிற நிறுவனங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 23, 24-ம் தேதிகளில் சோதனை நடத்தினர். சென்னையில் மொத்தம் 35 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில், பெரு நிறு வனங்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் சம்பந்தப்பட்ட 2 நிறுவனங்கள் ரொக்க மாக பல கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளதை வருமானவரித் துறை யினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும், பினாமி வங்கிக் கணக்குகளை பயன் படுத்தி, கடன் கொடுத்தவர்களிடம் இருந்து இவர்கள் அதிக வட்டி வசூலித்ததும் தெரியவந்தது.
இந்த 2 நிறுவனங்களும் தங்கள் வருமானத்தை மறைத்து, பல கோடி ரூபாயை முறைகேடாக பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்துள்ளதும் இந்த சோதனையில் தெரியவந்துள்ளது. சுமார் ரூ.300 கோடிக்கு மேலான வரு வாயை இந்த 2 நிறுவனங்களும் மறைத்து, வரி ஏய்ப்பில் ஈடுபட முயன் றதையும் வருமான வரித் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மொத்தம் 35 இடங் களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.9 கோடி கைப்பற் றப்பட்டது. இதுதொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடந்து வருகிறது என்று வருமானவரித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
சென்னை சவுகார்பேட்டை முத்தையா முதலி தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் வீடு மற்றும் தொழிற்சாலை, குடோன், வேப்பேரி மற்றும் அண்ணா நகரில் உள்ள அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், ஏராளமான ஆவணங்கள் சிக்கின. கணினிகள், லேப்டாப்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை ஆய்வு செய்த பிறகே ரூ.300 கோடி வரி ஏய்ப்பு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.