

நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர முரண்பாடுகள் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜன சங்கத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரான பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயாவின் 106-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை கமலாலயத்தில் அவரது உருவப் படத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, ‘இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்’ என்றபிரச்சார இணையதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர்,செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
நீட் தேர்வு குறித்து முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பயங்கர முரண்பாடுகள் உள்ளன. தமிழகத்தில் வியாபார சந்தையாக கல்விஇருந்ததை நீட் தேர்வு தகர்த்துள்ளது. இதை ஏ.கே.ராஜன் கமிட்டி ஏன் பேசவில்லை.
நீட் தேர்வு தொடர்ந்து நடந்தால், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏ.கே.ராஜன் அரசியல்வாதி போல பேசுகிறாரே தவிர, ஆய்வுக் குழு தலைவர்போல தரவுகள் அடிப்படையில் பேசவில்லை. மக்களிடம் தவறான தகவல்களை தெரிவிக்க, திமுகவின் தேர்தல் அறிக்கையுடன் போட்டி போட்டுள்ளது ஏ.கே.ராஜன் அறிக்கை.
2020-ல் தமிழக மாணவர்கள் மிகப் பெரிய அளவில் வெற்றிபெற்று, மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்த சூழலில்,அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்தவே அரசு சிந்திக்க வேண்டும். அரசியல் செய்வதற்காக, தேவையில்லாமல் விஷப் பரிட்சை செய்யக் கூடாது.
இந்த ஆண்டில் 150 மாணவர்களோடு எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தும், தமிழக அரசு திறக்க வேண்டாம் என்று முரண்டு பிடிக்கிறது. இது சமூகநீதிக்கு எதிரானது இல்லையா.
அதிமுக - பாஜக கூட்டணி சிறப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.